இரவோடு இரவாக மாறிய விஜய் நிகழ்ச்சி…ஜோதிடமா? பாதுகாப்பா? வெடிக்கும் கேள்விகள் ! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (நவ.2) புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ளார். புதிய பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றைத் திறந்து வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களாகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

முதலமைச்சர் வருகையையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுமார் 3,000 பேர் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்டமான பந்தல், மேடை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, திடீரென நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு சுமார் 100 பேர் மட்டுமே அமரக்கூடிய வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி ஏன் இவ்வளவு சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜோதிடர் சொன்னதால் இடமாற்றமா?

இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஜோதிடர் அல்லது ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டதா என்ற கேள்வியையும் சிலர் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

முதலில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, கடைசி நேரத்தில் அவற்றைக் கைவிட வேண்டிய அவசியம் என்ன? நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏதேனும் சென்டிமென்ட் பிரச்சினையா? அல்லது ஜோதிட ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதா எனப் பல்வேறு யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

மக்களின் வரிப்பணம் வீணாகிறதா?

இது ஒருபுறம் இருக்க, இந்த நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட செலவுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயுதப்படை மைதானத்தில் பிரம்மாண்டமாகப் பந்தல் அமைத்தல், மேடை ஏற்பாடுகள், பாதுகாப்புப் பணிகள் எனப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அந்த ஏற்பாடுகள் பயன்படுத்தப்படாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு சுமார் 40 கி.மீ. தொலைவுக்கு வழிநெடுகிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகப் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளப் பதிவுகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலமைச்சர் வருகைக்காகக் கல்லூரி செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும் சில பதிவுகள் கேள்வி எழுப்புகின்றன.

உலக சிக்கன நாள் அன்று சிக்கனத்தின் அவசியம் குறித்து அறிவுறுத்திய முதலமைச்சர், தனது வருகைக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய ஏற்பாடுகளின் செலவுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டாமா என்ற கேள்வியையும் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். முதலில் திட்டமிடப்பட்ட பிரம்மாண்ட அரசு விழா கடைசி நேரத்தில் சிறிய அரங்கிற்கு மாற்றப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இத்தனை நாட்களாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்கு யார் பொறுப்பு? மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு முறையான திட்டமிடல் தேவையில்லையா?

ஜோதிடர் சொன்னதால் இடமாற்றமா அல்லது பாதுகாப்பு காரணங்களா? காரணம் எதுவாக இருந்தாலும், மக்களின் வரிப்பணம் வீணாகிறதா என்ற கேள்விக்கு அரசு தரப்பில் விளக்கம் கிடைக்குமா என்பதே தற்போது எழுந்துள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *