அங்கு, அவர் மின் செலுத்துத் தடங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், துணை மின் நிலையத் திட்டங்ககள் ஆகியவற்றுக்கான வடிவமைப்புப் பொறியாளராகப் பணியாற்றினார். பக்ரா நங்கல் அணைத் திட்டத்திற்கான மின்மயமாக்கலை மேம்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பின்னர், லலிதா ஒரு ஒப்பந்தப் பொறியாளராகப் பல தொழில்நுட்ப மற்றும் நிறுவல் பணிகளைத் திறம்பட மேற்கொண்டார்.
1953-ஆம் ஆண்டு லண்டன் மின் பொறியாளர்கள் கழகத்தின் இணை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட லலிதா, 1966-ஆம் ஆண்டு நிலைப் உறுப்பினரானார். 1964-ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டது அவரது தொழில் வாழ்க்கையின் முக்கிய சாதனையாகும். 1964-ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் 21 வரை நியூயார்க் நகரில் நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டிலும் லலிதா இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்டார்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளில் உள்ள பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த லலிதா, தனது மகள் ஷியாமலா அறிவியல், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்க ஊக்குவித்தார். விதவை மறுமணத்தை ஆதரித்த அவர், தன் மகளின் நலனைக் கருத்தில் கொண்டு மறுமணம் செய்து கொள்ளவில்லை. 1977-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற லலிதா, 1979-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் நாள் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் காலமானார்.
உயர் மின்னழுத்த மின் பரிமாற்ற வழித்தடங்களின் வடிவமைப்பில் ஈடுபட்ட லலிதா, மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மின்சாரத்தைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான மின் பரிமாற்ற வழித்தட வடிவமைப்புகளை திட்டமிட்டார்.
மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்கும் துணை மின்நிலைய தளவமைப்பை உருவாக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டார். இது மின் விநியோகத்தின் பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவியது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க உதவிய இவரது பணி, மின் அமைப்புகளில் மின்சார இடையூறுகளைத் தடுத்து விபத்துக்களைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
மின் பொறியியல் என் இரத்தத்தில் ஊறியுள்ளது என கூறியுள்ள லலிதா, அவரது காலத்திற்குப் பின் இத்துறைகளில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார். உலகெங்கிலும் இந்தியாவிலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளை தேர்ந்தெடுத்து கல்வி பெறும் பெண்களுக்கு தங்கள் பாதையில் தொடர்ந்து பயணிக்க, மனவுறுதியும் அத்துறையின் மீதான ஆர்வமும் தேவை என லலிதா வலியுறுத்துகிறார்.