கொளுத்தி எடுக்கும் இந்தக் கோடை வெயில், மனிதர்களாகிய நம்மை மட்டுமல்ல… நம் வீட்டுச் செல்லப்பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட ஜீவன்களையும் கடுமையாக பாதிக்கவே செய்கிறது. குறிப்பாக சென்னை, வேலூர் போன்ற வெப்பமயமான நகரங்களில், இந்த ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) பிரச்னைகள் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
வீடுகளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஒன்றிப்போயிருக்கும் உங்கள் செல்லப்பிராணிகளின் நலனில் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் இந்தக் கோடை காலத்தில் துளியும் அலட்சியம் காட்டக் கூடாது. இந்த வெப்ப அலையின் தாக்கத்தால் மனிதர்களே நிலைகுலைந்து போய்விடும் நிலையில், இந்தச் சிறு ஜீவன்கள் எம்மாத்திரம்?
உள்ளூர் இன நாய்கள், பூனைகளைக் கடந்து, நமது சமூகம் வெளிநாட்டு நாய் மற்றும் பூனை இனங்களையும் பரிச்சயப்பட்டுக் கொண்டிருக்கிறது. `என்னோட வளர்ப்பு நாய் ரொம்ப வேகமா.. அதிகமா மூச்சு விடுது”, `என்னோட பூனை வெயிலில் ரொம்ப சோர்வா இருக்கு’ எனக் கூறுபவர்கள், `ஆனால், இதெல்லாம் வெயில் காலத்தில் சகஜம் தானே! ஒன்றும் பயப்பட வேண்டாம்’ எனக் காட்டும் சிறு அலட்சியம், சில சமயங்களில் உயிரையும் பறித்துவிடுகிறது என்பது கசப்பான உண்மை.
நாயோ பூனையோ… ஒரு பிராணியின் உடல் வெப்பநிலை அதீத நிலையை அடைந்து, அதன் உடலின் மெக்கானிசத்தால் அத்தகைய வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் நிலையிலேயே, ஹீட் ஸ்ட்ரோக் என்பது ஏற்படுகிறது. மனிதர்களாகிய நமக்கு நம்முடைய உடலே, வெப்பத்தைக் குறைப்பதற்கான வேலைகளைச் செய்யும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வை மூலம் வெப்பமானது தணிக்கப்படுகிறது.
ஆனால், நாய்க்கோ… பூனைக்கோ அப்படி இல்லை. நாய்கள் வாயால் மூச்சு விடுவதன் (Panting) மூலம் மட்டுமே வெப்பத்தைக் குறைக்க முயற்சிக்கும். அதே பூனைகள் என வரும்போது, அவற்றின் காலடிப் பகுதிகளில் (Paw pads) மட்டும் வியர்வைச் சுரப்பிகள் (Sweat glands) இருக்கும். அதன் மூலம் கொஞ்சம் வெப்பம் வெளியேறும். ஆனால் இது கோடை வெயிலுக்குச் சொல்லிக்கொள்ளும்படி பயன்தராது. அதனால் அதிக வெயிலில் அவற்றின் உடல் சீக்கிரம் சூடாகிவிடும்.