இறந்த சகோதரியின் எலும்பு கூட்டுடன் வங்கிக்கு சென்ற நபரால் பரபரப்பு – Kumudam

Spread the love

கேந்துஜார் மாவட்டத்தின் படனா வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஒடிசா கிராமீன் வங்கி’யின் மாலிபோசி கிளையில் தியானாலி கிராமத்தை சேர்ந்த, பழங்குடியினத்தை சேர்ந்த ஜீத்து முண்டா என்பவரின் மூத்த சகோதரி கல்ரா முண்டா சுமார் 2 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது வங்கி கணக்கில் சுமார் 19,300 ரூபாய் இருந்துள்ளது.இந்த நிலையில் வேறு சட்டபூர்வ வாரிசுகள் எவரும் இல்லாத நிலையில், காலமான சகோதரி கல்ரா முண்டாவின் பெயரில் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கேட்டு குறிப்பிட்ட வங்கி கிளைக்கு ஜீத்து முண்டா சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகளோ வங்கி கணக்கு யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் நேரில் வர வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்கள் இறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள்.

மேலும் பணத்தை எடுக்கும் நடைமுறையை முன்னெடுக்க, இறப்புச் சான்றிதழ் உட்பட பிற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வங்கி அதிகாரிகள் ஜீத்து முண்டாவிடம் கேட்டு கொண்டனர்.எனினும், முண்டாவால் காலமான சகோதரியின் வங்கி கணக்கில் பணத்தை கோர தேவையான ஆவணங்களை வழங்க இயலவில்லை. வங்கி கேட்ட சான்றிதழ்களை அவரால் சமர்ப்பிக்க முடியாத சூழலில் தனது சகோதரியை புதைத்த இடத்திற்கு சென்று, அங்கிருந்து அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி வெளியே எடுத்தார். 

அதனை ஒரு துணியால் சுற்றி பின்னர் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குறிப்பிட்ட வங்கியை கிளையை அடைந்தார். சகோதரியின் எலும்பு கூட்டை சுமந்து வங்கிக்கு வந்த ஜீத்து வந்த காட்சியைக் கண்டு உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கியின் செயல்பாடு மிகுந்த மனிதாபிமானமற்றது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர். “ஒரு ஏழை மனிதன் தனது சொந்தப் பணத்தை எடுப்பது இவ்வளவு கடினமான செயலா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இத தகவல் காட்டு தீயாய் ஊர் முழுவதும் பரவியதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜீத்துவை அமைதிப்படுத்தி, இந்தப் பிரச்சினையைத் தங்கள் பொறுப்பில் எடுத்து கொண்டனர். மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று தெரிவித்த காவல்துறையினர், இதுகுறித்து வங்கியிடம் விளக்கம் கோரி உள்ளனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *