இப்படி மத நல்லிணக்கத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் அளவிற்கு, திருவிழா நடந்து கொண்டிருக்க பள்ளிவாசலில் ரோஸ் மில்க் வழங்கிக் கொண்டிருந்த ஷாஜகான் அவர்களிடம் பேசினோம், “வருஷா வருஷம் மீனாட்சி அம்மன் பாவக்கா மண்டபாடி அன்று இந்தப் பக்கம் செல்லும்போது, பள்ளிவாசல் சார்பாக வரும் பக்தர்கள் தாகம் தணிப்பதற்காக நாங்கள் இதனை தொடர்ந்து செய்து வருகிறோம், இது ஏழாவது வருடம்.
சித்திரை திருவிழாவில் இந்த நாள்ல தெற்கு வாசல் இரண்டு மதத்தையும் ஒன்று சேர்க்குற பகுதியா மாறிடுது. எம்மதமும் சம்மதம் தானே, நாங்களும் மீனாட்சி அம்மாவுக்கு மரியாதை செலுத்தி இந்த திருவிழாவுல கலந்துக்குற விதமா இப்படி கொண்டாடுகிறோம்.
கடவுளுக்கு பேர் வேற வேற இருக்கலாம் ஆனால் இறைவன் ஒருவன் தானே, இதை செய்றதே அந்த இறைவன் பாக்கியம் என்று கருதுகிறோம். இங்க எந்த பாகுபாடும் கிடையாது; ஒரு மாமனா, மச்சானா, மாப்பிள்ளையா, எல்லாரும் ஒன்னா இங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம். இதுதான் நம்ம மதுரை, நம்ம இந்தியாவும் கூட” என்றார் புன்னகையுடன்.
மீனாட்சி அம்மனை வழிபட வந்த பக்தர், ஓய்வு பெற்ற பேராசிரியர் சேதுராமநாதன், பள்ளிவாசல் உள்ளே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார் அவரிடம் பேசினோம், “என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் இந்த பள்ளிவாசலில் இருக்கிறாங்க, அவங்க வேற மதத்துக்காரர்களா நான் பார்க்கிறது இல்ல.
மனிதனும் தெய்வமும் ஒன்னு னு சொல்லுவாங்க. இங்கு எந்த வித்தியாசமும் கிடையாது, நம்ம அன்னதானம் பண்ற மாதிரி அவங்க வர்ற பக்தர்களுக்கு குளிர்பானம் கொடுக்கிறாங்க. அதே மாதிரி பல்லக்கு வரும்போதும் நம்ம எப்படி மாலை மரியாதை செய்து வணங்குவோமோ அதே மாதிரி அவங்களும் பண்றாங்க. அந்த வகையில் மத நல்லிணத்திற்கு மதுரை ஒரு உதாரணம். இது இன்னைக்குன்னு மட்டும் இல்லாம என்னைக்குமே இருக்கணும். இருக்கும்!” என்றார்.