International
-Vigneshkumar
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இசை நிகழ்ச்சியில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளம் பெண்கள் மீது ஊசி மூலம் மர்ம பொருள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பிறகு பெண் ஒருவர் பலாத்காரமும் செய்யப்பட்டுள்ளார். பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற இசைத் திருவிழாவான ‘ஃபெட் டி லா மியூசிக்’ (Fete de la Musique) இந்த ஆண்டு பெரும் வன்முறையாகவும் குழப்பமாகவும் மாறியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ் பெற்ற இந்த இசைத் திருவிழாவில், லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளும் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.

என்ன நடந்தது
அவர்களில் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் புகார்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விழாவின் போது இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், கூட்ட நெரிசலில் பல பெண்கள் மீது ஊசிகள் குத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஊசி தாக்குதல்
இந்த விழாவில் நடந்த சம்பவங்களிலேயே மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண்களுக்கு நேர்ந்த ஊசித் தாக்குதல்கள் தான். கூட்ட நெரிசலில் பெண்கள் சிலர் தங்களின் உடலில் ஏதோ ஊசி குத்துவது போன்ற திடீர் வலியை உணர்ந்துள்ளனர். இப்படி ஊசி குத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிலர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, ‘பவுலவர்டு டி லா மேடலெய்ன்’ என்ற பகுதியில் இதுபோல ஊசிக் குத்தப்பட்ட பெண் ஒருவர் மயக்கமடைந்ததை அடுத்து, அவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஊசிகள் வழியே ஏதேனும் விஷம் செலுத்தப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலாத்காரம்
மேலும், இசைத் திருவிழாவின் போது பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் காவல் துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரீஸ் நகரின் மத்தியப் பகுதிகளான ‘சாட்லெட்’ உள்ளிட்ட பல இடங்களில் மோதல்களும், கத்திக்குத்துச் சம்பவங்களும் அரங்கேறின. குறுகலான தெருக்களில் அளவுக்கு அதிகமான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக அங்கு பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாத்கார புகார்கள் குறித்து பிரான்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாரீஸில் இளம் பெண் ஒருவருக்குச் சிரிஞ்ச் மூலம் மர்மப் பொருள் செலுத்தப்பட்ட பின்னர், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சிரஞ்ச் தாக்குதல் நடத்திய வேறு பெண்களும் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
பதற்றம்
இந்த விழாவில் பங்கேற்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், இந்த ஆண்டின் திருவிழாச் சூழல் மிகவும் அச்சுறுத்தும் வகையிலும் ஆபத்தானதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். பல இடங்களில் திடீரென வன்முறை வெடித்ததாகவும் அங்கிருந்த கூட்ட நெரிசலைப் பார்த்தபோது கூட்ட நெரிசலில் உயிரிழந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
இந்த அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக போலீசார் களமிறக்கப்பட்டனர். பிரான்ஸ் முழுவதும் சுமார் 243 பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான காவல் அதிகாரிகள், கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.