இளையராஜா என்றும் ராஜாதான் ! அறிமுக இயக்குநர் படம் முதல் ஆஸ்கர் மேடை வரை ! – Kumudam

Spread the love

இந்திய சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜா இசையமைத்துள்ள மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’ (Gondhal), 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 99-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) பிரிவில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருது போட்டிக்குள் இப்படம் நுழைந்துள்ளது.

கிராமிய கலாச்சாரத்தை மையமாக உருவான ‘கோந்தல்’ :

அறிமுக இயக்குநரான சந்தோஷ் திவாகர் இயக்கியுள்ள இந்த திரைப்படம், மகாராஷ்டிராவின் பாரம்பரிய வாழ்க்கை முறையையும், அங்கு நடைபெறும் பழமையான ‘கோந்தல்’ என்ற நாட்டுப்புற கலை மற்றும் வழிபாட்டு சடங்குகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்ற படைப்பு :

திரையரங்குகளில் வெளியான ‘கோந்தல்’ திரைப்படம், தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றதுடன், விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் திவாகர் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை வென்று படத்தின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தினார்.

அறிமுக இயக்குநரின் படத்திற்கும் அதே அர்ப்பணிப்பு :

பல தசாப்தங்களாக இந்திய இசை உலகில் தனி முத்திரை பதித்து வரும் இளையராஜா, பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி, புதிய இயக்குநர்களின் முயற்சிகளுக்கும் தனது இசையின் முழுமையான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

படத்தின் கதை, கதாபாத்திரங்களின் உணர்வு, காட்சிகளின் தாக்கம் ஆகியவற்றை தனது இசை மூலம் வலுப்படுத்துவது இளையராஜாவின் தனிச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், பெரிய விளம்பர பின்னணி இல்லாத ‘கோந்தல்’ போன்ற மராத்தி திரைப்படத்திற்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் தனது தனித்துவமான பாணியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு பிராந்தியத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பேசும் திரைப்படம் சர்வதேச அளவிலான ஆஸ்கர் போட்டியில் இடம்பிடிப்பதில், இளையராஜாவின் இசையும் முக்கியமான பலமாக அமைந்துள்ளது.

சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தரமான இசைக்கு முக்கியத்துவம்… அறிமுக இயக்குநரின் படைப்பை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற இசைஞானியின் பங்களிப்பு என OG இளையராஜா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மகிழ்ச்சிகளை தெரிவிக்கின்றனர்.

ஆஸ்கர் தேர்வு நடைமுறை :

தற்போது ‘கோந்தல்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்படத் தேர்வு நடைமுறையில் பங்கேற்கிறது.

இந்த பிரிவில் முதற்கட்டமாக 15 திரைப்படங்கள் கொண்ட குறும்பட்டியல் தேர்வு செய்யப்படும். அதன்பின்னர் இறுதியாக 5 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளாக அறிவிக்கப்படும்.

99-வது ஆஸ்கர் விருது விழா 2027-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

மொழி எல்லைகளை கடந்த இசைஞானியின் பெருமை :

தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி திரைப்படங்களிலும் தனது இசை மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் இளையராஜாவின் பயணத்தில், ‘கோந்தல்’ திரைப்படத்தின் ஆஸ்கர் தேர்வு மற்றொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது செப்டம்பர் 25 -ம் தேதி வெளியாகவுள்ள கார்த்திக் சுப்புராஜின் “டோரதி” படத்திற்கும் இளையராஜா இசையமைத்துள்ளார். அந்த படமும் சர்வேதச அளவிலான டொரோண்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்டு அங்குள்ள ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மொழி, பட்ஜெட், இயக்குநரின் அனுபவம் என எந்த எல்லைகளையும் பார்க்காமல், கதையின் உயிரை உணர்ந்து இசையமைக்கும் இளையராஜாவின் திறமைக்கு ‘கோந்தல்’ திரைப்படம் மீண்டும் ஒரு சான்றாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *