International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் விதியை இஸ்ரேல் மீறியதாகக் கூறி, ஈரான் அமெரிக்காவுடனான 60 நாள் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளது. இஸ்ரேல், தென் லெபனானில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்துவதே இந்த முடிவுக்கு காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையெழுத்தான 24 மணி நேரத்திற்குள் ஈரான் பின்வாங்கியுள்ளது. இதேபோல் இன்று ஜெனிவாவில் இருநாட்டு தலைவர்களும் சந்திக்க திட்டமிடப்பட்ட நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் பேச்சுவார்த்தை நிறுத்தம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மின்னணு முறையில் கையெழுத்தான சில மணி நேரங்களுக்குள், டிரம்ப்-ன் உத்தரவை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தென் லெபனானில் தாக்குதல்களை நடத்தியது. இந்த போரில் ஈரானுக்கு லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்தது, இதேபோல் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஆதரவு அளித்தது. இந்த நிலையில் டிரம்ப் பேச்சையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்க தரப்பு ஒப்பந்தத்தின் விதியை மீறுவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த விதி மீறலால், ஈரானின் பேச்சுவார்த்தை குழு சுவிட்சர்லாந்துக்கு புறப்படுவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில், முழு பயணமும் ரத்து செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடைபெறவிருந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் நிலைப்பாடு
ஈரான், தனது கடமைகளை ஒருதலைப்பட்சமாக நிறைவேற்றாது என்றும், இஸ்ரேலின் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, அமெரிக்கா ஒப்பந்தத்தின் முதல் விதியை நடைமுறையில் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வரை பேச்சுவார்த்தைகள் தொடராது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று அமெரிக்கா கூறுவதை ஈரான் நிராகரித்துள்ளது. இது, டிரம்பின் “நாடகம்” என்று ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
60 நாள் பேச்சுவார்த்தை நிறுத்தத்திற்கு முன்பே இஸ்ரேல் தாக்குதலை விமர்சனம் செய்யும் வகையில், அமெகிக்காவிடம் ஈரான் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வது, ஹார்முஸ் ஜலசந்தியில் முழு முற்றுகையை மீண்டும் கொண்டு வருவது, மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுப்பது உள்ளிட்ட எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால், போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையை ஈரான் மொத்தமாக நிறுத்தியுள்ளது.
இஸ்ரேல் செய்யும் காரியம் அமெரிக்கா – ஈரான் இடையேயான புதிய அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே பெரும் இடையூறாக மாறியுள்ளது. லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வது, வளைகுடா அமைதிக்கு மட்டுமல்லாமல், உலக எண்ணெய் வழித்தடங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.


