International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ”போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் தொடர்ந்து மீறி வருகிறது. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்கப்போவது இல்லை. நாங்கள் மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஈரான் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்தது. அதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியது.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் சிங்கப்பூர் கொடியுடன் ஹார்முஸ் ஜலசந்தி அருகே பயணித்த எம்வி எவர் லவ்லி கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதையடுதது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு மையங்கள், கடலோர ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு மீண்டும் ஈரான் சார்பில் எம்டி கிகு என்ற பெயரில் பனாமா நாட்டு கொடியுடன் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இன்று 2வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தும் அமெரிக்கா, ஈரான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்படடுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றாவிட்டால் ஈரான் என்ற மொத்த நாட்டையும் அழிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார். இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
” போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக அமெரிக்க விமானங்கள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்களை மீண்டும் தாக்கியுள்ளது. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்கப்போவது இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. நாங்கள் மிகவும் வெற்றிகரமாக தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஈரான் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும்” என கோபமாக கூறியுள்ளார்.