“ஈழத் தமிழரான மைத்ரேயி… பரதநாட்டியம் ஆடலாமா?” – கிளம்பிய புதிய சர்ச்சை! – Kumudam

Spread the love

கனடாவில் பிறந்து வளர்ந்த மைத்ரேயியின் குடும்பப் பின்னணி இலங்கையைச் சேர்ந்தது. தனது அடையாளம் குறித்து பேசும்போது, தான் கனடாவைச் சேர்ந்தவர் என்றும், தனது கலாசாரம் தமிழ் என்றும், குடும்ப வேர்கள் இலங்கையில் இருப்பதாகவும் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் மைத்ரேயி தன்னை “Tamil Eelam woman” என்று அடையாளப்படுத்திப் பேசிய வீடியோ இணையத்தில் பரவியது. இதையடுத்து அவரது அடையாளம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

இதற்கிடையே, மைத்ரேயி நடித்துள்ள புதிய Netflix படமான ‘Best of the Best’ திரைப்படமும் இந்த சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது. படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், தனது கதாபாத்திரத்தின் அடையாள வசனத்தில் மாற்றம் செய்யக் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் “Tamil Sri Lankan” என குறிப்பிடப்பட்டிருந்த வசனம், மைத்ரேயியின் கோரிக்கைக்குப் பிறகு “I’m Tamil. My family’s from Sri Lanka” என மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இலங்கையைச் சேர்ந்த சில சிங்கள தேசியவாத சமூக ஊடகக் கணக்குகள் மைத்ரேயியின் நிலைப்பாட்டை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் நடித்துள்ள படத்துக்கு IMDb-ல் குறைந்த மதிப்பீடு வழங்குமாறு சிலர் பிரசாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்க AI கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்ற பதிவுகளும், மைத்ரேயியை விடுதலைப் புலிகள் ஆதரவாளராக சித்தரிக்கும் குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மைத்ரேயியின் அடையாள விவகாரத்துடன் சேர்ந்து அவர் கற்றுக்கொண்ட பரதநாட்டியமும் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

‘Best of the Best’ படத்திற்காக மைத்ரேயி பரதநாட்டியப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கனடாவில் பிறந்து இலங்கைத் தமிழ் குடும்பப் பின்னணியைக் கொண்ட ஒருவர், இந்தியப் பண்பாட்டை மையமாகக் கொண்ட படத்தில் நடிப்பதும், பரதநாட்டியம் கற்பதும் ஏன் என சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்தியக் கலாசாரத்தை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களுக்கு இந்திய நடிகர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்துகளும் பதிவாகின.

இதற்கு எதிர்வினையாக, ஈழத் தமிழர்களும் தமிழ் பண்பாட்டு மரபின் ஒரு பகுதிதான். பரதநாட்டியத்துக்கும் தமிழ் மண்ணுடன் நீண்ட வரலாற்றுத் தொடர்பு உள்ளது என்று கூறி பலர் சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகின்றனர்.

இதனால் மைத்ரேயியின் நடிப்பைத் தாண்டி, அவரது தமிழ் அடையாளம், ஈழத் தமிழ் பின்னணி, பரதநாட்டியத்தின் பண்பாட்டு வரலாறு என விவாதம் புதிய திசையில் நகர்ந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *