உங்கள் ஜாதகத்தில் சனியுடன் வேறு கிரகம் சேர்ந்திருக்கிறதா? பரிகாரம் அவசியமா? – தெரிந்துகொள்ளுங்கள்!

Spread the love

ஜோதிடத்தில் அதிகம் கவனம் பெறும் கிரகம் சனி. ஜாதகப்படியும் கோசாரப்படியும் அவருடைய நிலைகளை உன்னிப்பாக கவனிப்போம். ஆனால், அவர் பயத்தைத் தருபவர் அல்ல; வினைகளைத் தீர்க்க உதவும் நீதிமான். அதேநேரம், ஜாதகத்தில் அவருடன் வேறு கிரகங்கள் இருந்தால் என்ன பலன், பரிகாரம் அவசியமா என்பதை நாம் அறிவது அவசியம்.

கிரக சேர்க்கை

சனி – சூரியன்:

இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகைவர்் என்பதால், ஜாதகத்தில் இந்தச் சேர்க்கை சிலாக்கியம் இல்லை. தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவு சுமுகமாக இருப்பதற்கில்லை. சொத்துக்கள் சம்பந்தமாக கோர்ட்டுக்குச் செல்லவும்கூடும். ஒரு விதத்தில் இந்தச் சேர்க்கையானது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகச் சொல்லலாம்.

அதேநேரம், சங்கீதத்திலும் கலைகளிலும் ஆர்வமும், அழகாகப் பேசும் திறனும் இவர்களிடம் காணப்படும். அதிக செல்வாக்கும் செல்வமும் பெற்றிருந்தாலும், கலகம் செய்வதிலும், மற்றவர்களை ஏமாற்றுவதிலும் சாமர்த்தியம் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு சனிதசை சூரியபுக்தி அல்லது சூரியதசை சனிபுக்தி நடைபெறும் காலங்களில், பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

ஒருமுறையேனும் சூரியனார்கோவில் மற்றும் திருநள்ளாறு சென்று வழிபட்டு வரலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் கோளறு பதிகம் படித்து வழிபடலாம். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க்காப்பு செய்து வழிபட, நன்மைகள் உண்டாகும்.

சனி – சந்திரன்:

ஜாதகத்தில் சனி-சந்திரன் சேர்க்கை இருப்பின், அந்த ஜாதகர் அழகான தோற்றத்துடன் திடகாத்திரமாகக் காணப்படுவர். ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டிருப்பர். இவர்களில் சிலர் மாந்த்ரீக விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும், அதை வியாபார ரீதியாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பார் கள். பழங்களைச் சாப்பிடுவதில் பிரியம் அதிகம் இருக்கும். உடல் நலனைப் பராமரிப்பதில் சிரத்தையுடன் இருப்பார்கள். இயல்பிலேயே சாமர்த்தியசாலிகளான இவர்கள் பகைவர்களை சுலபமாக வெல்லக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.

அவரவர் குலதெய்வத்தைச் சிக்கென பிடித்துக்கொள்வது நன்று. இரண்டு கிரகங்களாலும் கிடைக்கும் நன்மைகள் அதிகரிக்க, வெள்ளை நிற மலர்கள் சாற்றி அம்பாளை வழிபட்டு வரலாம்.

சனி – செவ்வாய்:

ஜாதகத்தில் சனி-செவ்வாய் இணைந்து இருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள், நீண்ட கைகளைப் பெற்றிருப்பர். நல்ல கல்வியறிவும், புத்திக்கூர்மையும், திறமையும் ஒருசேரப் பெற்றிருப்பார்கள். எல்லா விதமான சுகசெளகர்யங்களைப் பெற்றிருக்கும் இவர்கள் மற்றவர்களால் பெரிதும் புகழப்படுவார்கள். தன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உபகாரம் செய்வார்கள்.

அதேநேரம், தவறு செய்பவர்களைக் கண்டால் தயவுதாட்சண்யம் பார்க்கமாட்டார்கள். கெமிக்கல், இரும்பு தொடர்பான தொழிலிலோ, வியாபாரத்திலோ ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பார்கள். எப்போதும் சிந்தனை வயப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள்.

கிடைக்கும் வாய்ப்புகளில் வெற்றிபெற முருக வழிபாடு கைகொடுக்கும். செவ்வாய்க்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் படைத்து சஷ்டிக்கவசம் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.

சனி – புதன்:

இந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் இணைந்து இருந்தால், நிறைந்த கல்வியறிவு உண்டாகும். வாதப் பிரதிவாதங் களில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். மற்றவர்களை விடவும் தான் மேலானவன் என்பது போன்ற கர்வமும் இவர்களிடம் காணப்படும். ஆசிரியராகவோ மத ஆச்சார்யராகவோ புகழ் பெறுவார்கள். அரசாங்கம் தொடர்பான சட்ட நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் அதிகாரம் மிக்க பணியில் இருப்பார்கள். நல்ல தேஜஸுடன் காணப்படும் இவர்களுக்குச் சொந்த வீடு, நிலங்கள் போன்றவை அமைவதுடன், மனைவி வழியிலும் சொத்துக்கள் சேரும்.

புதன் கிழமைதோறும் மீனாட்சியம்மனை தியானித்து வழிபடலாம். வீட்டில் செளந்தர்ய லஹரி படிப்பதும் கேட்பதும் விசேஷம்.

சனி – குரு:

இவர்கள் நிறைந்த கல்வியறிவும் ஞானமும் பெற்றிருந்தாலும், அதனால் இவர்கள் அடையக்கூடிய பலன்கள் மிகக் குறைவாகவே இருக்கும். தாய்மாமன் வகையில் மிகுந்த ஆதரவு உண்டு. தாயார்வழி மாமாக்களுடைய ஆதரவைப் பெற்றிருப்பர். இந்தச் சேர்க்கையானது சில தருணங்களில் புத்திரர்களால் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும். 30 வயதுக்குப் பிறகு ஜாதகருக்கு எதிர்பாராத பதவி கிடைப்பதுடன், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். இவர்களில் பலரும் பணம் கொடுக்கல் வாங்கலிலும், பணம் புழங்கக்கூடிய இடங்களிலும் வேலை செய்து பணம் சம்பாதிப்பர். பூமி வகையிலும் இவர்களுக்கு லாபம் உண்டாகும்.

மகான்களின் அதிஷ்டனங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். அங்கு நடைபெறும் அன்னதானத்துக்கு இயன்ற பங்களிப்பை வழங்கலாம்.

சனி

சனி – சுக்ரன்:

செல்வம், செல்வாக்கு, புகழுடன் திகழ்வார்கள். அந்தஸ்தும் அதிகாரமும் உள்ள பதவிகளில் இருப்பார்கள். சாஸ்திரங்களில் உள்ளவற்றை நம்பிக்கையுடன் பின்பற்றுவார்கள். பக்தியும் தெய்வ நம்பிக்கையும் கொண்டிருக்கும் இவர்கள், எது நடந்தாலும் நன்மைக்கே என்னும் மனப் பக்குவத்தைப் பெற்றிருப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருக்கும் இவர்களுக்கு, அவர்களுடைய ஆதரவும் கிடைக்கும். வைரம், பொன், வஸ்திர ஆபரணங்களுடன் உன்னத மான நிலையில் இருப்பார்கள். பல ஆட்களை வைத்து வேலை வாங்கும்படியான அதிகார யோகமும் இவர்களுக்கு உண்டு. சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றுப் புகழுடன் திகழ்வார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடாழ்வாரை வழிபடலாம். மேலும் தாயார் சந்நிதியில் தாமரை சமர்ப்பித்து வழிபடுவதால் விசேஷ பலன்கள் கைகூடும்.

சனி – ராகு:

மிகுந்த கல்வியறிவுடன் இருக்கும் இவர்கள் ஏறக்குறைய ஓர் அரசருக்கு நிகராக பணியாள்கள் சூழ இருப்பார்கள். நிலங்கள், வீடு வாசல், மாடு, கன்றுகள், பால்பாக்யம், கீர்த்தி, வண்டி, வாகனங்கள் முதலியவற்றுடன் பலரும் மதிக்கும்படியாக வாழ்வார்கள். பெண்களால் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். இவர்களில் பலர் சட்டம் படித்து, நீதித் துறையில் உயர்பதவி வகிப்பதுடன், நீதியை மிக நேர்மையுடன் கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குச் சகோதர, சகோதரி வகையில் இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும்.

இவர்கள் அம்பாளை வழிபடுவதால், கிடைக்கும் நன்மைகள் இரட்டிப்பாகக் கிடைக்கும். பெளர்ணமியில் அபிராமி அந்தாதி படித்து வழிபடுவது விசேஷம்.

சனி – கேது:

இந்தச் சேர்க்கையானது நல்ல இடத்தில் அமையப் பெற்றிருந் தால், ஆன்மிகத்தில் நாட்டமும், தெய்வ பக்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சாதகமற்ற நிலையில் இந்தச் சேர்க்கை அமைந்திருப்பின், குறிப்பிட்ட ஜாதகருக்கு அதீத முன்கோபம் உண்டாகும். சட்டென மற்றவர்களை சாமர்த்தியமாக ஏமாற்றி விடுவார்கள். பெயருக்கு ஆசைப்பட்டு, தான தர்மங்களைச் செய்வார்கள். மற்றவர்கள் வீட்டில் உணவு உண்பதில் பிரியம் இருக்கும். பித்த சம்பந்தமான நோய்கள் இவர்களுக்கு ஏற்படக்கூடும்.

இவர்களுக்குப் பரிகாரம் தேவை. விநாயகர் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். சதுர்த்தி தினங்களில் பிள்ளையாருக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. அபிஷேகத்துக்குப் பால் வாங்கிக் கொடுக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *