பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தைத் திருத்துவதற்கும், தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைப்பதற்கும் வழிவகுக்கும் அரசியலமைப்பு (131-வது) திருத்த மசோதா 2026′, ‘எல்லை நிர்ணய மசோதா 2026’ மற்றும் ‘யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த மசோதா), 2026’ ஆகிய மூன்று முக்கிய மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், சமாஜ்வாதி எம்.பி. அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காரசாரமான வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, அவையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான முன்மொழிவின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் குறித்து வேணுகோபால் கேள்விகளை எழுப்பி, “பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு தருவது நல்லதுதான். ஆனால், அதை ஏன் உடனே (அதாவது 2024 மக்களவைத் தேர்தலிலேயே) அமல்படுத்தவில்லை? தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஏன் காத்திருக்க வேண்டும்?” என வினவினார்.
அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுந்து, “இந்த மசோதா இன்னும் முறைப்படி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இப்போதுதான் அறிமுகம் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும்போது, விவாதத்திற்கு வராத ஒரு மசோதாவின் உள்ளடக்கம் மற்றும் காலக்கெடு குறித்து இப்போது எப்படி கேள்வி கேட்க முடியும்?” என ஆட்சேபனை தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர், வேணுகோபாலிடம் அவையின் நடைமுறைகளை விளக்கத் தொடங்கியபோது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஒருவர் ‘முதலில் அந்த எம்.பி-யின் மைக் இயங்குகிறதா?’ எனச் சந்தேகம் எழுப்பினார்.

மற்றொரு எம்.பி “மைக் அணைக்கப்பட்டிருக்கிறது” என்றார். ராகுல் காந்தியும் மைக்கைச் சுட்டிக்காட்டி, “மைக் வேலை செய்யவில்லை,” என்றார். அப்போது மக்களவை சபாநாயகர் நகைச்சுவையாக, “மைக் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் மைக் மட்டும்தான் வேலை செய்யாமல் போகிறது,” என்று பதிலளித்தார்.
இந்த உரையாடலின் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது அவர்களின் மைக் அணைக்கப்படுவதாக ராகுல் காந்தி முன்னதாகக் கூறிய குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருந்தது.