நாள்பட்ட உடல் வலி மற்றும் சோர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கக்கூடும். மனது உற்சாகமில்லாமல் இருப்பதுகூட முக்கிய காரணமாகும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது (Physical inactivity) இன்னொரு காரணம். தமிழ்நாட்டில் பொதுவாக மாவுச்சத்து (Carbohydrates) நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
போதுமான அளவு புரதச்சத்து எடுத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, 60 கிலோ எடை உள்ளவர்கள் 60 கிராம் புரதச்சத்து எடுக்க வேண்டும். அப்படி எடுக்காமல் போகும்போது ஏற்படும் புரதச்சத்துக் குறைபாட்டினாலும் உடல் வலி வரலாம்.
வெறும் சோறு, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், இட்லிப்பொடி என்றே சாப்பிடுவதால் நம்முடைய உணவில் மற்ற வைட்டமின்கள் எதுவும் பெரிய அளவில் இருப்பதில்லை. அதுவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள் (Dry fruits) மற்றும் பருப்பு வகைகள் (Nuts) போன்றவற்றைச் சாப்பிடாததால் மல்டி வைட்டமின் குறைபாடுகள் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
அசைவ உணவு (Non-veg) சாப்பிடுபவர்களுக்குக் கூட ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தால், வைட்டமின் பி 12 அளவு 112 அல்லது 113 என்ற அளவில்தான் இருப்பதைக் காண முடிகிறது. ஆனால், அது 160 அல்லது 180-க்கு மேல் இருந்தால் நல்லது. உடலில் பி-காம்ப்ளெக்ஸ் (B-Complex) சத்து இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

60 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தச்சோகை (Anemia) உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் (Hemoglobin) அளவு குறைவாக இருப்பதும் உடல் வலி மற்றும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர, மற்ற உடலுறுப்புகளின் செயல்பாடுகளையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஈரல், சிறுநீரகங்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்தை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும்.
வெயில் காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் ஒரு காரணம். வியர்வையின் வழியாக உடலில் உள்ள உப்பு வெளியேறிவிடுவதால், உடலில் போதிய உப்புச்சத்து இல்லாமல் போவதும் இந்த வெயில் காலத்தில் ஏற்படும் உடல் வலி மற்றும் கை, கால் வலிக்குக் காரணமாக இருக்கலாம்.
எனவே, நாம் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சமச்சீர் உணவு (Balanced diet) எடுத்துக் கொள்கிறீர்களா என்றும் பாருங்கள். இப்படி எல்லாவற்றையும் பார்த்துவிட்டுதான் உங்கள் சோர்வு மற்றும் உடல் வலிக்கான காரணம் அறிந்து சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.