திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கிய ‘கயற்றம்’ சினிமாவில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, தன்னை சனல்குமார் பின்தொடர்ந்து தொல்லை செய்வதாகவும், சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாகவும் கூறி 2022-ம் ஆண்டு மஞ்சு வாரியர் எளமக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் சனல்குமார் அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அதேபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் சனல்குமார் சசிதரன். மஞ்சு வாரியர் ஒரு குறிப்பிட்ட மாபியா கும்பலின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி இயக்குநர் சனல்குமார் சசிதரன் கடந்த சில நாட்களாகத் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி மறுநாடன் மலையாளி என்ற யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து சமூக வலைதளங்கள் வாயிலாகத் தனக்கு எதிராகத் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகக் கூறி, மலையாளத் திரைப்பட இயக்குநர் சனல்குமார் சசிதரனுக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர் எர்ணாகுளம் முன்சீப் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், இயக்குநர் சனல்குமார் சசிதரன் முதன்மை எதிர்மனுதாரராகவும், மறுநாடன் மலையாளி யூடியூப் சேனலின் ஆசிரியர் ஷாஜன் ஸ்காரியா இரண்டாவது எதிர்மனுதாரராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவதூறு கருத்துகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மூன்றாவது எதிர்மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மஞ்சு வாரியருக்கு எதிராக அவதூறான கருத்துகளையோ, பதிவுகளையோ சமூக வலைதளங்களில் வெளியிட இயக்குநர் சனல்குமார் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சனல்குமார், ஷாஜன் ஸ்காரியா உள்ளிட்டோருககு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நீதிமன்ற நடவடிக்கைக்குப் பின் மஞ்சு வாரியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாந்தி மாயாதேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமூக வலைதளங்கள் இருக்கின்றன என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் எதையும் பேசிவிடலாம் என்ற தவறான போக்கு அதிகரித்து வருகிறது; இது சட்டப்படி முற்றிலும் தவறானது” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தற்போது முகநூல் பதிவில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் கூறியுள்ளதாவது, “மஞ்சு வாரியர் எனக்கு எதிராக தொடுத்த வழக்கின் உத்தரவு மற்றும் மனுவின் நகல்கள் எனக்குக் கிடைத்தன. பல ஊடகங்கள் அதை மானநஷ்ட வழக்கு என குறிப்பிடுகின்றன. இது ஒரு மானநஷ்ட வழக்கு அல்ல; இதில் ‘மானநஷ்டம்’ என்ற ஒரு வார்த்தை கூட இல்லை.
நான் முகநூலில் இந்த விவகாரத்தைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு தடை உத்தரவு கோரும் மனு மட்டுமே இது. இந்த விவகாரம் மக்களிடம் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது, யாரும் உண்மையை அறிந்துகொள்ள முனையக் கூடாது என்பது மட்டுமே இதன் நோக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.