
இடைத்தேர்தலில் ஆளும் தரப்புடன் மல்லுக்கட்டத் தயாராகி வருகிறது தி.மு.கழகம். அதற்கானப் பணியில் படுதீவிரமாக இருந்த அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அறிவாலயத்தில் சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.
கூட்டணி பலம் இல்லாமல், ஆளுங்கட்சியை இடைத்தேர்தலில் தி.மு.க.வால் வெல்ல முடியுமா?
“யாருமே எதிர்பாராத ஒரு விபத்து 2026 தேர்தலில் நடந்துவிட்டது. மக்களை ஏமாற்றி, அவர் ஆட்சிக்கு வந்துவிட்டார். எனவே, இந்த தேர்தலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. கடந்த 120 நாட்களில் தமிழ்நாட்டில் நடந்தவற்றையெல்லாம் பார்த்து மக்கள் மனமாற்றத்துடன் இருக்கிறார்கள். எங்கள் கூட்டணியிலிருந்து தடம் மாறி போனவர்கள் போய்விட்டார்கள். விசுவாசமான கட்சிகள் எங்களுடன்தான் இருக்கிறார்கள்.”
தி.மு.க. கூட்டணியை ‘கல்லாப்பெட்டி கூட்டணி என விமர்சித்த விஜய்… உங்களுடன் இருந்த ? கட்சிகளை சேர்த்துக்கொண்டு ம.ச.வெ.கூட்டணி அமைத்திருக்கிறாரே?
“அந்த கல்லாப்பெட்டிகள் எல்லாம் இப்போது அங்குதான் இருக்கின்றன. அவர்கள் இல்லையென்றால் அவரின் ஆட்சியே கிடையாது. இதுதான் கல்லாப்பெட்டி ஆட்சி!
இடைத்தேர்தலில் தி.மு.க. வென்றால் விஜய் ஆட்சி மூன்று மாதங்களில் கவிழும் என்கிறீர்களே எப்படி ?…
“இது மெஜாரிட்டி இல்லாத ஆட்சி. 34 சதவிகித வாக்குகள்தான் விஜய் வாங்கியிருக்கிறார். திமுக 31 சதவிகிதம் வாங்கியிருக்கிறது. ஆகவே, அரசியல் சூழல் மாறும் அது எப்படி என்று சொல்லி அவர்களை உஷார்படுத்த விரும்பவில்லை. அங்கிருக்கும் மந்திரிகளேகூட மாறலாம்.”
தி.மு.க. மீதான விஜய்யின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், தி.மு.க. மந்திரியே சிறையில் இருந்த வரலாறும் இருக்கத்தானே செய்கிறது?
“அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 1.5 % வழக்குகள்கூட நிரூபிக்கப்படவில்லை. எல்லாமே அரசியல் பழிவாங்கலுக்காக போட்டிருக்கிறார்கள். இடி. வழக்குகள் எஃப்ஐஆர் ஆகத்தான் இருக்கின்றன அல்லது விசாரணை நிலையில்தான் இருக்கின்றன. விசாரிக்கட்டும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்கிறோம்.”
இன்றைய கொலை குற்றங்கள், போதைப்பொருள் 2 புழக்கம் அதிகரிப்புக்கு கடந்த தி.மு.க. அரசுதான் காரணம் என குற்றம்சாட்டுகிறதே த.வெ.க?
“ஆடத்தெரியாதவர்கள் கூடம் பத்தவில்லை என்பார்கள். அதுபோல, விஜய்யின் ஆட்சியில்தான் இவ்வளவும் நடந்திருக்கிறது. கஞ்சா செடியை த.வெ.சு. நபர் வளர்த்திருக்கிறார். அமைச்சர் ஒருவரே பவுடர் எடுத்துக்கொள்கிறார் இவற்றை எல்லாம் ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும்போது மறுத்திருக்க வேண்டுமில்லையா! அதேபோல, பெரும்பாலான குற்றங்கள் செய்தவர்கள் தவெகவை சேர்ந்தவர்கள்தான்.”
டேபிளில் 3 ஃபைல்கள், தி.மு.க. மாஜி வீடுகளில் ரெய்டு, பார்ட்டி ஃபண்ட் குற்றச்சாட்டு ஆகியவற்றை எப்படி பார்க்கிறது தி.மு.க?
“ரெய்டு என்பதெல்லாம் ஒருநாள் பத்திரிகை செய்தி. தமிழக மக்கள் தெளிவாக இதை புரிந்திருக்கிறார்கள். மூன்று ஃபைல்கள் பற்றி தெரியாமல் சொல்லியிருக்கிறார் முதல்வர். அது அவருக்கே புரியவில்லை. சி.ஏ.ஜி. அறிக்கைதான் அது. அதை வைத்துக்கொண்டுதான் ‘மூன்று ஃபைல் இருக்கு என சொல்லிக்கொண்டிருக்கிறார். சரி, ஓபன் பண்ணுங்க’ என சவால்விட்ட பிறகு மிசா பற்றி பேச வந்துவிட்டார். இவர் ஏதோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி, சினிமாவில் பேசுவதுபோல பேசுகிறார். பாவம் விவரம் தெரியாத பிள்ளை.”
ஒரு லட்சம் கோடிக்கு முதலீடு ஈர்ப்பு, இப்போது புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு பயணம் என த.வெ.க. வேகமாக செயல்படுகிறதே?
“ஒரு லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு என்பதே தவறான தகவல். அப்படி இருந்திருந்தால், சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை வந்தபோது அவர் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். அவர் லண்டனுக்கு போனது முதலீடு ஈர்க்க அல்ல… வேறொரு காரணத்திற்காக போயிருக்கிறார். அதை நான் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். தனிப்பட்ட தாக்குதல் என்பார்கள். உதயநிதியை கைதுசெய்தது போல என்னையும் செய்வார்கள்.”
நீங்கள் சொல்வதை பார்த்தால், த.வெ.க.வை பார்த்து பயப்படுகிறதா தி.மு.க?
“கைது செய்வார்கள். தேவையில்லாத பிரச்னை எதற்கு? காரணமில்லாமல் சர்க்காருக்கும், எங்களுக்கும் செலவுதான் ஏற்படும். அதேபோல தனிப்பட்ட விவகாரத்தை பேசினேன் என சொல்லி அவருக்கு ஆதரவாக நான்கு பேர் அறிக்கை விடுவார்கள். அந்த சிக்கலில் நான் மாட்ட விரும்பவில்லை.
அ.தி.மு.க. ஏற்கெனவே வலுவிழந்துள்ள நிலையில், தி.மு.க.வையும் வீழ்த்தவேண்டும் என நேரடியாக காங்கிரஸும், மறைமுகமாக பா.ஜ.க.வும் செயல்படுகிறதா?
தி.மு.க. தோன்றிய காவத்திலிருந்து அதை அழிக்க பல பேர் முயன்றார்கள். தடைச் சட்டமே கூட போட்டார்கள். அதை காங்கிரஸ்தான் செய்தது. அதன்பிறகே அண்ணா ராஜதந்திரமாக தனிநாடு கேட்காமல், மாநில சுயாட்சி கொள்கையை கொண்டுவந்து கட்சி நடத்தினார். தி.மு.க.வும் 76 ஆண்டுகளை தாண்டிவிட்டது. அதி.மு.க. மாநில கட்சியாக இருந்தால் எமர்ஜென்சியில் தடை செய்துவிடுவார்கள் என பயந்துதான் எம்.ஜி.ஆரே அனைத்திந்திய அ.தி.மு.க.’ என மாற்றினார். அன்றே தி.மு.கவை பேராசியர் போன்றோரின் உதவியோடு தூக்கி நிறுத்தி 50 ஆண்டுகாலம் காப்பாற்றியவர் கலைஞர்.
தி.மு.க.வை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதாலும், சிறுபான்மையினர் தி.மு.க.வுடன் இருக்கிறார்கள் என்பதாலும் தி.மு.க.வை அழிக்க நினைத்த ஆர்.எஸ்.எஸ். மதச்சார்பற்ற போர்வையில் ஒருவரை நிறுத்தி ஏதேதோ குழப்பம் செய்ய நினைத்தார்கள். அதனால், இந்த தேர்தலில் தி.மு.க. சற்று பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஆனால் இது நிரந்தரமல்ல. 1991ல் இரண்டு சீட் வென்ற நாங்கள் 1996ல் ஆட்சிக்கு வந்தோம். திமுகவை யாராலும் அழிக்க முடியாது.”
2029ல் விஜய் பிரதமர் வேட்பாளர் என்றால், கூட்டணிக்கு திருமா தலைமை வகிப்பார் என சொல்லப்படுகிறதே… அச்சூழலை எப்படி எதிர்கொள்ளும் தி.மு.க?
“போகாத ஊருக்கு வழிகாட்டும் கதை இது. திருமா பெயரைச் சொல்வதால் அதைப்பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. காரணம், விஜய் பிரதமர் வேட்பாளர் என்ன.. அவர் ஐ.நா. சபைக்குகூட தலைவராக வருவார். தவெகவினர் கற்பனைக்கு எல்லையே கிடையாது.”
– குமுதம் செய்திகளுக்காக அ . கண்ணதாசன் .