வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
சில படங்களின் தலைப்பு நம்மைச் சுண்டி இழுக்கும். விஜய் அவர்களின் படங்களான…1) பூவே உனக்காக…2) காதலுக்கு மரியாதை 3) துள்ளாத மனமும் துள்ளும்
அந்த வகையை சேர்ந்தவை . இந்த பெயர்களில் ஒரு அழகியல் ஒளிந்திருக்கும்.
அது ரசிகர்களை வா வாவென்று அழைக்கும். நம்பி செல்லலாம். மிகப்பெரிய வெற்றி படமாக அது அமையும் என்று முதல் நாள் பார்க்க செல்லும் போதே ஒரு நம்பிக்கை வரும். இந்த மூன்று படங்களும் காதலை…வெவ்வேறு வகையானகாதலை.. மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். மூன்றிலும் பாடல்கள் எப்போதும் விரும்பி கேட்கும் படி இருக்கும். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி வரும் போது நிச்சயமாக “பூவே உனக்காக’மட்டுமே முதலிடம் பெறும்.
மற்ற இரண்டு படங்களும் அதற்கு பிறகு வெளியானவை.
தினமும் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கும். அந்த பூக்கள் யார் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களிடம் சென்று சேரும். சிலவகை ஆண்டவனிடம் சென்று சேரும். இந்த இயக்கம் ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. பெண்களை ‘பூ’என்று சொல்வதுண்டு. இந்த தலைப்பில் அந்த ‘பூ’ வான ஒரு பெண்ணுக்காக அவளை காதலித்த ஒருவன் அவளுக்காக என்ன செய்கிறான் என்பதே படத்தின் ஒரு வரிக்கதை.
காதல் என்று வரும் போது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரம் கனவுகள் உள்ளுக்குள்ளே இருக்கும். நெஞ்சுக்குள் முதன் முதலாக வரும் முகம் அவன்/அவள் உயிருள்ள வரையில் மறக்க முடியாது. “நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்”என்று கவிஞர் கு மா பாலசுப்ரமணியன் அவர்கள் ‘சித்ராங்கி’ என்ற படத்தில் எழுதியிருப்பார்.
காதலை எவ்வளவு உயரத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார் பாருங்கள் . அதை அடிப்படையாக கொண்டே காதல் என்பது ஒரு முறை முதல் முறை பூப்பது மட்டுமே என்ற அஸ்திவாரத்தை வைத்துக்கொண்டு எல்லாருடைய உள்ளங்களையும் தனது திரைக்கதை பிரம்மாஸ்திரம்மூலம் தாக்கி வென்றார்…அப்போதைய அந்த இளம் ஹீரோவை வெற்றி வீரனாக்கினார் இயக்குநர் விக்ரமன் அவர்கள்.

படத்தின் கதையை இயக்குநர் விக்ரமன் அவர்கள் எழுதி முடித்த பிறகு யார் ஹீரோ என்று முடிவு செய்யாத ஒரு நாளில் தொலைக்காட்சியில் விஜய் அவர்கள் நடித்த ஒரு படத்தின் பாடலை பார்க்கிறார். அவர் மனதில் இவர்தான் அந்த ஹீரோ என்ற முடிவுக்கு வருகிறார். பேட்டிகளில் பலமுறை இதை சொல்லி இருக்கிறார். அதுவரையில் அந்த ஹீரோ பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ் செௌத்ரி அவர்களிடம் தகவல் சொல்கிறார். அவர் உட்பட பலர் இயக்குநர் முடிவுக்கு உடன்படவில்லை. ஆனாலும் விக்ரமன் அவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் படம் உருவாகிறது. பிரபஞ்சம் ஒருவருக்கு மாலை சூட முடிவெடுத்துவிட்டால் யார் மூலமாவது அவர் கழுத்துக்கு வெற்றி மாலை சென்று விடும்.அதன் பிறகு மிகப்பெரிய உயரத்திற்கு அவர் சென்று விடுவார். விஜய் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது.