Tamilnadu
oi-Vignesh Selvaraj
சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் அருகே இன்று திடீரென வித்தியாசமான சூறாவளி காற்று வீசியது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகின. தூசி எழும்பி புனல் போன்று சுழல் காற்று வீசியது ஏன் என சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
தூத்துக்குடியில் இன்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென சுமார் 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் மாறத் துவங்கியது. பின்னர், வாகைகுளம் விமான நிலையம் அருகே டொர்னடோ (Tornado) என்று அழைக்கப்படும் வெளிநாடுகளில் அடிக்கடி உருவாகும் சுழல் காற்று வானத்துக்கும் நிலத்துக்கும் இடையே ராட்சத அளவில் உருவானது.

தூத்துக்குடியில் அதிசய சூறாவளி
இந்த அதிசய நிகழ்வை அந்தபகுதியில் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதனைச் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். திடீரென உருவான சுழல் காற்றால், வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் சுங்கச்சாவடி வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தூத்துக்குடியில் சூறாவளி காற்று வீசியது குறித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த சுழல் காற்று ஏன் உருவானது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தென்தமிழ்நாடு முழுவதும் சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 3.1 கி.மீ உயரத்தில் நிலவிய கிழக்கு – மேற்கு திசை காற்றழுத்தப் பள்ளம் காரணமாக இன்று தூத்துக்குடியில் வலுவான மேல்நோக்கிய காற்றோட்டத்துடன் இடியுடன் கூடிய மழை மேகங்கள் உருவாகின.
Tornado near Thoothukudi Airport🍃💨@praddy06 @ChennaiRains @TenkasiWeather @ramanathan4548 pic.twitter.com/yBxdI7XyXk
— Pearlcity Weather (@TutyRains) June 21, 2026
வானிலை மையம் விளக்கம்
இதன் விளைவாக தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று, தூசியுடன் எழுந்து தீவிரமாக காற்று மேல்நோக்கி வீசியது. இந்த புனல் போன்ற அமைப்பானது, பெரும்பாலும் கியூமுலோனிம்பஸ் (Cb) மேகத்திற்குக் கீழே இருந்த வலுவான மேல்நோக்கிய காற்றோட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்; அது தூசியை மேலே தூக்கி, சுழலும் அல்லது செங்குத்தான காற்றுத் தூணை உருவாக்கி இருக்கலாம்.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தூத்துக்குடியில் சூறாவளி காற்று வீசுவது அரிது. ஏனெனில், டொர்னடோ உருவாக தேவையான வலுவான காற்றழுத்த வேறுபாடு, கீழ்மட்ட காற்றுத் திசை மற்றும் வேக மாற்றம், ஒழுங்கமைந்த புயல் சுழற்சி போன்ற சாதகமான வளிமண்டல சூழ்நிலைகள் பொதுவாக இங்கு காணப்படுவதில்லை.
எனவே, இந்த நிகழ்வானது ஒரு உண்மையான சூறாவளியாக இருப்பதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் உருவான வெப்பச்சலனச் சுழல், புழுதிச் சுழல் அல்லது தற்காலிக புனல் மேகமாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம்.
வலுவான கியூமுலோனிம்பஸ் மேகங்கள் (Cb) சில நேரங்களில் குறுகிய காலத்திற்கு புனல் போன்ற அமைப்புகள், பலத்த காற்று மற்றும் தூசி எழுச்சியை ஏற்படுத்தினாலும், தூத்துக்குடியில் டொர்னடோ உருவாகும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.