வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
‘இந்தத் தடவையாவது நம் தோட்டத்திற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து விட்டு வாங்க… வழக்கம் போல, ‘கந்தன் பாவம்… அவன் குடும்பம் பாவம்… அவன் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்….அவனோட மூஞ்சிக்கு நேரா சொல்ல மனசுக்குக் கஷ்டமா இருந்தது… அதுதான் சொல்லாம வந்துட்டேன்னு’ திரும்பி வந்து நிற்காதீங்க…’ என்றாள் மங்களம் கண்டிப்பாக.
‘இல்ல… இல்ல.. இந்த முறை அவன்கிட்ட பேசிடறேன்…’ என்று பெரியசாமி உறுதியாகச் சொன்னவுடன் அவளின் முகத்தில் கொஞ்சம் பிரகாசம் தட்டியது. என்னதான் மனைவியிடம் சமாதானம் சொல்லிவிட்டாலும், கந்தனின் அந்த எதார்த்தமான முகத்தைப் பார்த்து இந்த விசயத்தை எப்படிச் சொல்லப் போகிறோம் என்ற நெருடலும் பெரியசாமியின் மனதில் இருந்தது.
மேலே நடந்த உரையாடலைப் புரிந்து கொள்ள முடியாமல் வாசகர்கள் யாரும் திணற வேண்டாம். கந்தன் வேறு யாருமல்ல… கிராமத்தில் உள்ள பெரியசாமியின் மூன்று ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழுது கொண்டிருப்பவன். பெரியசாமியின் தகப்பனார் காலத்தில் இருந்தே அவர்களின் தோட்டத்தை கந்தனின் தகப்பன் உழுது கொண்டிருக்க, அவர் காலத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக தற்போது வரை அவர் மகன் கந்தன் உழுது கொண்டிருக்கிறான். தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக ஒரே ஆளின் கையில் தோட்டம் இருப்பது சரியல்ல என்று மங்களத்தின் உறவுகள் அவளுக்கு எடுத்துச் சொல்ல, மங்களம் பிடிவாதமாக தோட்டத்திலிருந்து கந்தனை விலக்க வற்புறுத்திக் கொண்டிருக்கிறாள்.

‘ரொம்ப நாள் ஒரே ஆள் வசம் தோட்டம் இருந்தால் அது அவர்களுக்கு சொந்தம் ஆகி விடுமாமே?’ என்றாள் மங்களம்.
‘அப்படியெல்லாம் செய்யக் கூடிய ஆள் கந்தன் அல்ல. மேலும், இந்த தேதி வரை நிலத்திற்கான வரி கட்டிய ரசீது என் பெயரில்தான் இருக்கிறது. கவலைப் படாதே..’ என்று தேற்றினாலும், முந்தைய நாள் நடைப் பயற்சியின் போது பெரியசாமியின் நெருங்கிய நண்பர் கார்த்திகேயன் சொன்னது காதில் ஒலித்தது.
‘காலம் மாறிவிட்டது பெரியசாமி… யாரையும் இந்தக் காலத்தில் நம்ப முடியாது.. காரணம் ரியல் எஸ்டேட் தொழிலில் நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்தவுடன், ஆசை யாரையும் விட்டு வைக்கவில்லை. பெண்கள் சொத்துக்காக தங்கள் உடன் பிறந்தவர்களின் மேல் வழக்குப் போடுவதும், தந்தை மீது மகன் வழக்குப் போடுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. நீ என்னதான் ரிகார்ட் வைத்திருந்தாலும் அனுபவ பாத்யதை மற்றும் சாட்சிகளை வைத்து சிலர் வழக்கில் ஜெயித்து விடுகிறார்கள்… மேலும் என்னைப் பொறுத்தவரை, எந்தச் சொத்தாக இருந்தாலும் அதிக நாட்கள் ஒருவரின் கஸ்டடியில் விட்டு வைப்பது நல்லதல்ல..’.
‘இல்லை கார்த்தி…சிறுவயது முதல் கந்தனை எனக்குத் தெரியும்… அடுத்தவர் பொருளுக்கு ஆசைப் படாதவன். அவன் மனைவியும் ஒரு அப்பாவி…அவன் அப்படிச் செய்ய மாட்டான்..’.
‘அவன் நல்லவனாக இருக்கலாம். சுற்றி உள்ளவர்கள் சொல்லிக் கொடுத்து அவன் புத்தியைக் கெடுத்து விட்டால்? ஏன் கந்தனின் பிள்ளைகளே கூட படித்தவர்களாக இருந்தால், சட்டத்தைப் பற்றித் தெரிந்த அவர்களுக்கே இந்த எண்ணம் வரலாமே?’ என்ற கார்த்திகேயனின் பேச்சு நியாயமாகப் பட்டது பெரியசாமிக்கு.
இந்த முறை ஊருக்குச் சென்ற போது ஒரு திடமான முடிவுடன் சென்றார் பெரியசாமி. மனதைக் கல்லாக்கிக் கொண்டாவது கந்தனிடம் தோட்டத்தை விட்டு விடச் சொல்ல வேண்டும் என்று. தோட்டம் கண்ணுக்குக் குளுமையாகக் காட்சி தந்தது. அவரின் தோட்டத்து மூன்று ஏக்கரிலும் எங்கும் பசுமை பரவிக் கிடந்தது. தோட்டத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்த கந்தனும் அவன் மனைவி காளியம்மாவும் அவனைக் கண்டதும் ஓடி வந்தனர். வழக்கமான குசல விசாரிப்புகள் முடிந்தவுடன், நேராக விசயத்திற்கு வராமல், பெரியசாமி கந்தனின் பிள்ளைகளின் படிப்பைப் பற்றிக் கேட்டார். கந்தனுக்கு ஒரு பையனும், பெண்ணும் என்பது மட்டுமே அவர் தெரிந்து வைத்திருந்தார்.

‘இரண்டு பேரும் படிச்சு முடிச்சிட்டு ஏதோ வேலைக்குப் போறாங்க.. என்ன வேலைன்னு புரியலைங்க..’ என்றான் கந்தன் அப்பாவியாக.
‘என்ன ஆளப்பா நீ… பசங்க என்ன வேலை செய்றாங்க அப்படிங்கறது கூட தெரியாத ஆளா இருக்கிறே?’ என்றவுடன்,
‘ஐயா, ஒரு நிமிசம்…. தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கு… இப்ப வந்தர்றங்க ..’ என்று நழுவி அவசர அவசரமாகத் தோட்டத்துக்குள் ஓடினான் கந்தன்.
தானும் லேசாக நழுவ காளியம்மா முயல, சந்தேகம் தோன்ற கேள்வியால் அவளை நிறுத்தினார் பெரியசாமி.
‘கந்தன் படிக்காதவன்… அவனுக்கு பசங்க என்ன வேலை செய்றாங்கன்னு சொல்லத் தெரியல…சரி..நீ பத்தாவது படிச்சு டீச்சர் ட்ரெயினிங் எடுத்தவ.. நீ சொல்லு… உன் பசங்க என்ன வேலை செய்றாங்க?’ என்றார் கடுமையான குரலில்.
கொஞ்சம் தடுமாறியவள்,
‘ஐயா.. பெரியவன் உத்தர்காண்ட் மாநிலத்தில் ட்ரெயினிக் எடுக்கிறானுங்க… இன்னும் ரெண்டு மாசத்துல ட்ரெயினிங் முடிஞ்சு வந்துருவாங்க…’ என்றாள்.
‘உத்தர்காண்ட்டா? மசூரியிலா?’ என்றார் பரமசிவம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த குரலில்.
‘ஆமாங்க ஐயா…’ என்று இழுத்தாள் காளியம்மாள்.
‘ஓஹோ..உங்க பையன் கலெக்டர் என்பதை மறைக்கத்தான் ரெண்டு பேரும் ஒண்ணும் தெரியாதவங்க போல நடிச்சீங்களா?’ என்றார் பெரியசாமி கோபத்துடன்.
‘இல்லீங்க ஐயா.. என் ஊட்டுக்காரர்தான் உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாருங்க..’ என்றாள் பரிதாபமாக.
‘சரி…பொண்ணு என்ன வேலை செய்யறா? அதையாவது பொய் சொல்லாம சொல்லு..’ என்றார் கடுப்புடன்.
‘ஐயா…தஞ்சாவூர்ல வருவாய் கோட்ட அலுவலரா இருக்காளுங்க..’.
‘ஓஹோ… மகன் கலெக்டர்…மகள் சப் கலெக்டர் ரேங்க்… இவங்க பவரை வெச்சு நீயும் கந்தனும் இந்த தோட்டத்தை பிடுங்கிக் கொள்ள திட்டம் வெச்சிருக்கறீங்களா? ‘ என்று கோபத்தின் உச்சிக்குச் சென்று வார்த்தைகளை அள்ளி வீசினார்.
அதுவரை மற்றவர்கள் சொன்னதை நம்பாமல் இருந்த அவர் , தன்னிடம் மறைக்கப்பட்ட செய்தியினால் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
மனைவி பெரியசாமியின் முன் தடுமாறிக் கொண்டு இருப்பதைப் பார்த்த கந்தன் தோட்டத்துக்குள் இருந்து ஓடோடி வந்தான்.
அவனைப் பார்த்ததும் அவரின் கோபம் அதிகரித்தது.
‘கந்தா, மற்றவர்கள் உன்னைப் பற்றி சந்தேகமாகச் சொன்ன போது நான் நம்பவில்லை. ஆனா என்னிடம் நீ உண்மையை மறைக்க முயற்சிப்பதிலிருந்து தெரிந்து விட்டது. உன்னால் தோட்டத்தை விட்டுப் போக முடியாது இல்லையா? ‘ என்றார்.
‘உண்மைதாங்க ஐயா… என்னால் தோட்டத்தை விட்டு இருக்க முடியாது. ஆனா, நீங்களும் மற்றவர்களும் நினைக்கிற மாதிரி உங்க நிலத்திற்கு ஆசைப்பட்டு இல்லைங்க. நான் பிறந்த இரண்டு மாதத்திலிருந்து என் தாய் தகப்பன் என்னை இந்த மண்ணில் போட்டு வளர்த்தாங்க ஐயா.. நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு இந்த மண்ணில்தானுங்க ஓடி, ஆடி விளையாடினேன். இந்த மூன்று ஏக்கரில் என் காலடி படாத இடமே இல்லைங்க. இப்பக் கூட, நீ வெளியே போடான்னு நீங்க சொன்னா உடனே போயிடறேங்க. ஆனா, அதுக்கு அப்புறம் என் உசுரோடவும், உடம்போடவும் கலந்து விட்ட இந்த மண்ணை விட்டுப் போய் எத்தனை காலம் உயிரோடு இருப்பேன்னு தெரியலைங்க ஐயா..’ என்றவன் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது.

இடையில் காளியம்மாள் தொடர்ந்தாள்,
‘ஐயா, எங்க ரெண்டு பிள்ளைகளும் தோட்டத்தை உங்கள் வசம் விட்டு விட்டு வந்து, வீட்டில் ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க… உங்களுக்கும் வயசாயிடுச்சுன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா இவருதான் பிடிவாதமா என்னால சும்மா இருக்க முடியாதுன்னு சொல்லி பசங்களை சமாளிச்சிக்கிட்டு இருக்காரு… ஆனா, பசங்க உங்களைப் பார்த்து, தோட்டத்திலிருந்து எங்கள வெளியேத்தி விடச் சொல்ல முயற்சி எடுக்கும்போதெல்லாம், ஏதேதோ காரணம் சொல்லி இவரு உங்களை சந்திக்க விடாம செய்திட்டாருங்க ஐயா..’ என்றாள்.
கந்தனின் கண்ணீரைப் பார்க்கச் சகிக்காமல்,
‘சரி.. உன்னோட பையனின் போன் நம்பரைக் கொடு..’ என்று நம்பரை வாங்கிக் கொண்டு கிளம்பினார்.
‘எப்படிங்க இந்த மாதிரி ஐடியா உங்களுக்கு வந்தது?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் மங்களம்.
‘நான் இப்படி யோசித்தேன்… அதாவது கந்தனின் நேர்மையான ஆசையும் நிறைவேறணும்… நம்ம பிரச்சினையும் தீரணும்…அதை மனதில் வைத்து கந்தனின் பையனிடம் பேசினேன். அவனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.. அதாவது, இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி நிலத்திற்கு விலையை நிர்ணயம் செய்வது. பாதிப் பணத்தை இப்போதே அக்ரிமெண்ட் போடும்போது நமக்குக் கொடுத்து விடுவது. அடுத்த இரண்டு வருடத்திற்குள் மீதிப் பணத்தைக் கொடுத்து விட்டு நிலத்தை கந்தனின் பேரில் கிரயம் செய்து கொடுத்து விடுவது என்று’.
‘வாழ்க்கையில் முதல் முறையாக புத்திசாலித்தனமா ஒரு காரியம் பண்ணியிருகிறீங்க..’ என்றாள் மங்களம் கிண்டலாக.
பெரியசாமிக்கு, கந்தனும், காளியம்மாவும் கை கூப்பி புன்னகையுடன் நிற்கும் காட்சி தோன்றி மனதிற்கு நிறைவைத் தந்தது.
(முற்றும்)
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ