கொலை செய்யப்பட்ட காளிராஜ், சின்னத்துரையை அடிக்கடி உருவக் கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் சக தொழிலாளிகள் இருவரையும் சமாதானப்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. கடந்த 24-ம் தேதி, இதே போன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, காளிராஜ் சின்னத்துரையைக் கீழே தள்ளி தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உருவக் கேலி செய்து வந்ததுடன், தினசரி சந்தையில் அனைவரின் முன்னிலையிலும் தன்னைக் கீழே தள்ளித் தாக்கியதை அவமானமாகக் கருதிய சின்னத்துரை, ஆத்திரத்தில் காளிராஜைக் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

உருவக் கேலி மற்றும் தாக்குதல் ஆகியவைதான் கொலைக்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காளிராஜுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்தனமாகத் தொடங்கிய கிண்டல், கேலி பிரச்னை கொலையில் முடிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.