தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா போட்டியிடுகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கியிருக்கிறார். இதுதான் தவெகவுக்குள் சிலருடைய அதிருப்திக்கு காரணமாக இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
“கட்சிக்காக ஆரம்பத்திலிருந்தே வேலை பார்த்தவர்களை விட்டுவிட்டு, வேறு கட்சியிலிருந்து வந்தவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருப்பது சரியா?” என்று சில உள்ளூர் தவெக நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக அந்தத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
அதோடு, “கடந்த தேர்தலில் கட்சியின் களப்பணி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் மக்கள் ஆதரவு கிடைத்தது. இப்போது அதிமுக பின்னணியுடன் வந்த வேட்பாளரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என்ற சந்தேகமும் சில நிர்வாகிகள் மத்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதில் இன்னொரு கணக்கும் ஓடுகிறதாம். “ஒருவேளை சத்தியபாமா வெற்றி பெற்றுவிட்டால், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து தவெகவுக்கு வருபவர்களின் முக்கியத்துவம் அதிகரித்துவிடும். அப்படியானால் ஆரம்பத்திலிருந்து கட்சியில் இருப்பவர்களின் நிலை என்ன?” என்று சில தவெக நிர்வாகிகள் கேள்வி எழுப்புவதாகச் சொல்லப்படுகிறது.
இவை குறிப்பிட்ட சில நிர்வாகிகளின் கருத்துகளே தவிர, ஒட்டுமொத்த தவெக நிர்வாகிகளின் நிலைப்பாடு அல்ல என்பதையும் கட்சி வட்டாரங்களில் மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தாராபுரத்தில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால், தவெக தரப்பைப் பொறுத்தவரை தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பு குறித்தும் சில பேச்சுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கோட்டை அமைச்சருக்கு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது, மற்றொரு தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதன் காரணமாக சில அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் களப்பணியில் முழு வேகத்தில் இறங்கவில்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுவதாகத் தகவல். இதுவும் தவெகவுக்குள் நிலவும் பொதுவான நிலைப்பாடு அல்ல, சிலர் தெரிவிக்கும் கருத்து மட்டுமே என அந்தக் கட்சி வட்டாரங்களே தெரிவிக்கின்றன.
ஆக, வெளியே ஐந்து கட்சிகள் போட்டியிட்டாலும், உள்ளே ஆளாளுக்கு ஒரு கணக்கு… சத்தியபாமாவுக்கோ கணக்கு மேல கணக்கு என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
இப்படியாக, மதுராந்தகம், தாராபுரம் என இரு தொகுதிகளிலும் ஆளுங்கட்சி தரப்புக்குள் இருப்பதாகக் கூறப்படும் அதிருப்திகளைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக, இந்த இரண்டு தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது தவெகவைத் தோற்கடிப்பது அரசியல் ரீதியாக முக்கியமானதாக இருக்கும் என திமுக, அதிமுக தரப்புகளில் சிலர் கருதுவதாகக் கூறப்படுகிறது. அதிலும், திமுக – அதிமுக தரப்பினர் இடையே மறைமுகமாக ஒரு ‘ஜென்டில்மேன் டீல்’ பேசப்பட்டிருப்பதாக தேர்தல் களத்தில் ஒரு தகவல் உலா வருகிறதாம்.
அதன்படி, திமுகவினர் தங்கள் ஆதரவாளர்களிடம் உதயசூரியனுக்கு வாக்கு கேட்பதுடன், அதிமுகவினரைச் சந்திக்கும் சில இடங்களில், “இது உங்களுடைய கட்சி ஏற்கெனவே வென்ற தொகுதி. நாங்கள் இங்கே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம். எப்படியாவது நீங்கள் ஜெயித்துவிடுங்கள். எந்தச் சூழலிலும் விசில் மட்டும் வந்துவிடக் கூடாது” என்று கூறுவதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவலை அதிமுக தரப்பினர் சிலர் தங்களுக்கு சாதகமான சமிக்ஞையாக எடுத்துக்கொண்டு, களப்பணியில் உற்சாகமாக ஈடுபட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சத்தியபாமாவுக்கு எதிராக இருப்பதாகக் கூறப்படும் உள்ளூர் அதிருப்தி, அமைச்சர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் தேர்தல் வியூகங்கள் என தாராபுரம் களம் பல அடுக்குகளாக மாறியிருக்கிறது.
தேர்தல் முடிவு வெளியாகும் வரை யார் யாருடன்… எந்தக் கணக்கில்… எங்கே கைகோக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாது. ஆனால், “வெளியில் ஐந்து முனைப் போட்டி… உள்ளே கணக்கோ அதைவிடப் பல முனை” என்பதுதான் இப்போதைய தாராபுரம் தேர்தல் களத்து ஹாட் டாப்பிக்.

