உள்ளே ரகசிய பார்சல்.. 3 நாட்களாக பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கும் துருக்கி ராணுவ ஜெட்கள்! | Mysterious Turkish Military Flights to Pakistan Spark Drone & Air Defence Delivery

Spread the love

International

oi-Shyamsundar I

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களில் கடந்த 60 மணி நேரமாகத் துருக்கி நாட்டு ராணுவ விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்குவது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21 வரையிலான இடைவெளியில், துருக்கிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அந்நாட்டு விமானப்படைக்குச் சொந்தமான சி-130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்கள் தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் விமானப்படை தளங்களில் இந்த விமானங்கள் தொடர்ச்சியாகத் தரை இறக்கப்பட்டு மீண்டும் துருக்கிக்குத் திரும்பிச் சென்றுள்ளன. மூன்று நாட்களுக்குள் இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அசாதாரண விமானப் போக்குவரத்து, சர்வதேச அளவில் உளவு துறைகளில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Turkish Military Flights

ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் சப்ளையா?

பாகிஸ்தான் தனது ஆயுதக் கிடங்கை நவீனப்படுத்தவும், ஆளில்லா வான்வழித் தாக்குதல் திறனைப் பெருமளவு விரிவுபடுத்தவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் வந்து இறங்கியுள்ள துருக்கி சரக்கு விமானங்கள் வழியாக அதிநவீன ட்ரோன்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உதிரி பாகங்கள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்ரோன் தொழில்நுட்பங்களை மட்டும் அல்லாமல், அவற்றுடன் சேர்த்து HQ-சீரிஸ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளையும் பாகிஸ்தான் பெற்றிருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தானின் வான் எல்லைகளை வலுப்படுத்தவும், வான்வழித் தற்காப்பு அரணை கட்டமைக்கவும் இந்த புதிய உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

துருக்கி தயாரிப்பான பேராக்டர் டிபி2 ரக நடுத்தர உயர, நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்ட நவீன போர் ட்ரோன்கள் ஏற்கனவே பாகிஸ்தானிடம் பயன்பாட்டில் உள்ளன. உக்ரைன்-ரஷ்ய போரில் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் பீரங்கிகள், தரைப்படை மற்றும் கடற்படை தளங்களுக்கு எதிராக பேராக்டர் டிபி2 ட்ரோன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பிறகு, இந்த ட்ரோன்கள் உலக அளவில் பெரும் புகழ்பெற்றன. இந்த ரக ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே தற்போதைய சரக்குகள் இறக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானின் தீவிர ட்ரோன் விரிவாக்க வியூகம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர், நவீன ஆளில்லா போர் முறைகளை ராணுவத்தில் சேர்ப்பதில் அதிக முன்னுரிமை அளித்து வருகிறார். கடும் பொருளாதார நெருக்கடிகள் நிலவிய போதிலும், ஏற்கனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் துருக்கி-சவூதி அரேபியா உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளின் கீழ் இந்த ஆயுதக் கொள்முதல் வேகமெடுத்துள்ளது.

தற்கொலைப்படை போல செயல்படும் லாயிட்டரிங் முனிஷன்ஸ் எனப்படும் சுழலும் வெடிகுண்டுகள், நீண்ட நேரம் காற்றில் வட்டமிட்டு உளவு பார்க்கும் அதிநவீன கண்காணிப்பு ட்ரோன்கள் ஆகியவற்றை வாங்குவதில் பாகிஸ்தான் தீவிர கவனம் செலுத்துகிறது. பாகிஸ்தான் ஏற்கனவே தனது மேற்கு எல்லைப் பகுதிகளில் துருக்கியின் ட்ரோன்களைப் பயன்படுத்தி உளவு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 19 முதல் 21 வரை நூர் கான் மற்றும் மஸ்ரூர் தளங்களில் நிகழ்ந்த இந்த தொடர் விமானப் போக்குவரத்து, பாகிஸ்தான் தனது வான் பாதுகாப்பு மற்றும் ட்ரோன் படைகளை எந்த வேகத்தில் நவீனப்படுத்தி வருகிறது என்பதையும், துருக்கி-பாகிஸ்தான் இடையேயான ராணுவ கூட்டணி எந்த அளவிற்கு தீவிரமடைந்துள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *