2024 மக்களவைத் தேர்தலில் “இந்தியா’ கூட்டணியாகப் போட்டியிட்ட சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மொத்தமுள்ள 80 இடங்களில் 43 இடங்களை (சமாஜ்வாதி – 37, காங்கிரஸ் – 6) கைப்பற்றி பாஜக-வுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தன. ஆனால், 2027 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம், தங்கள் கட்சிக்கு 175 முதல் 200 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியிடம் முதற்கட்டப் பட்டியலை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“மக்களவைத் தேர்தல் வெற்றி மற்றும் கட்சியின் கட்டமைப்பு பலத்தின் அடிப்படையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது” என அவர் வாதிடுகிறார்.
தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு வெறும் 2 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் வெற்றியைச் சட்டமன்ற இடங்களாக மாற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அதிக இடங்களை விட்டுக்கொடுக்க அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தயாராக இல்லை. நேரு-காந்தி குடும்பத்தின் கோட்டைகளாகக் கருதப்படும் ரேபரேலி – அமேதி உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் தற்போதைய கள நிலவரம் மற்றும் வாக்கு வங்கி குறித்து சமாஜ்வாதி கட்சி ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு கட்சிகளும் தனித்தனி குழுக்களை அமைக்கவுள்ளன.