“சங்க உறுப்பினர்கள் எவரேனும் கடுமையான முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்கள் அல்லது தீய நோக்கத்துடன் புத்தகங்களைப் பதிப்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது சங்க விதிகளின்படி கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று பபாசி (தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்) அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், ” பதிப்புத் துறையில் 50 ஆண்டுகளாக நேர்மையையும் நம்பகத்தன்மையையும் நிலைநாட்டி வருகிறோம். பதிப்புத் துறையில் நடைபெறும் ஒழுக்கநெறி மீறல்கள் மற்றும் முறைகேடான செயல்பாடுகளை பபாசி வன்மையாகக் கண்டிக்கிறது. தற்போது சில பதிப்பகங்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளைச் சங்கம் மிகுந்த கவனத்துடனும் தீவிரத்துடனும் அணுகுகிறது.

தற்போது விசாரணைக்கு உட்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பதிப்பகங்களும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட நபர்களும் எந்தக் காலகட்டத்திலும் பபாசி சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்ததில்லை என்பதைச் சங்கம் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்துகிறது.
1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பபாசி, பதிப்புத் துறையின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பாதுகாக்கும் வகையில், கடந்த 50 ஆண்டுகளாகக் கடுமையான உறுப்பினர் சேர்க்கை விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது.
பபாசியின் உறுப்பினர் சேர்க்கை விதிமுறைகளின்படி, முழு உறுப்பினர் தகுதிக்குப் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் இணை உறுப்பினராகச் செயல்பட்டிருக்க வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில், இணை உறுப்பினர்கள் பபாசி நடத்தும் புத்தகக் கண்காட்சிகளில் பங்கேற்க மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சங்கத்தின் நிர்வாகம், கொள்கை முடிவுகள் மற்றும் பிற நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்கு உரிமை வழங்கப்படுவதில்லை.