எகிறும் விலைவாசி… 10,000 ரூபாயில் தீபாவளி பட்ஜெட்… கடனில் சிக்காமல் கொண்டாடலாமே! | guidance for deepavali expenditure budget

Spread the love

மக்களே… தீபாவளி ஒரு நாள் கொண்டாட்டம். நிச்சயமாக மகிழ்ச்சியாகக் கொண்டாடத்தான் வேண்டும். ஆனால், அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கிவிட்டு, பிறகு மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாமே. நான்கு பேர் உள்ள குடும்பத்துக்கு 10,000 ரூபாய்க்குள் பட்ஜெட் போட்டு, அதை மீறாமல் செலவுகளைக் கட்டுப்படுத்தி, பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடலாமே.

ரூ.10,000-ல் தீபாவளி பட்ஜெட்!

நான்கு பேருக்கான புத்தாடைகள்: ரூ.4,000

இனிப்பு, கார வகைகள்: ரூ.1,500

பட்டாசுகள்: ரூ.1,000

மளிகை, சமையல் பொருள்கள்: ரூ.1,500

உறவினர்களுக்குப் பரிசுகள்: ரூ.1,000

எதிர்பாராத செலவுகள்: ரூ.1,000

மொத்தம்: ரூ.10,000

புத்தாடைகளில் சிக்கனம்!

புத்தாடை இல்லாமல் தீபாவளி முழுமை பெறாது. ஆனால், நான்கு பேருக்கும் ஆளுக்கு இரண்டு, மூன்று செட் துணிகள் வாங்கவேண்டிய அவசியமில்லை. பிராண்டட் கடைகளில்தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம் பட்ஜெட்டுக்குள் செலவுகளை அடக்கும் வகையில் நல்ல ஆடைகளை, சாதாரணக் கடைகளில் நிச்சயமாக வாங்க முடியும். ஆஃபர் இருக்கிறது என்பதற்காகத் தேவையில்லாத ஆடைகளை வாங்காமல் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வது முக்கியம்.

இனிப்பும் காரமும் வீட்டிலேயே செய்யலாமே!

கடைகளில் தயாராகக் கிடைக்கும் இனிப்பு, கார வகைகளை வாங்காமல் வீட்டிலேயே முறுக்கு, அதிரசம், லட்டு போன்றவற்றைத் தயாரிக்கும் பட்சத்தில் செலவுகளை வெகுவாகக் குறைக்கலாம். ஆரோக்கியத்துக்கும் கேரன்டி. குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒன்றிரண்டு நவீன இனிப்பு வகைகளை மட்டும் குறைந்த அளவில் கடையில் வாங்கிக்கொள்வது தவறில்லை. ‘எங்கள் வீட்டில் நானே செய்தது’ என்று சொல்லி நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம்.

பட்டாசுக்கு ஓர் எல்லை உண்டு!

இன்றைக்கு நவீன ரக பட்டாசுகள் ஏராளமாக வந்துவிட்டன. பணம் இருப்பவர்கள் அவற்றை வாங்குவதில் தவறில்லை. ஆனால், கடன் வாங்கி விலை உயர்ந்த பட்டாசு வகைகளை வாங்க வேண்டுமா என்பதில் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆசைக்கு இடம் கொடுத்தாலும், அதற்கென முன்கூட்டியே ஓர் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். ரூ.1,000 அல்லது ரூ.2,000-க்குள் பாதுகாப்பான, தரமான பட்டாசுகளை வாங்கினாலே போதுமே!

கிரெடிட் கார்டு வேண்டாமே!

கையில் பணம் இல்லாதபோது கிரெடிட் கார்டு ஒரு வசதியாகத் தெரியும். ஆனால், முழுத் தொகையையும் உரிய காலத்தில் செலுத்த முடியாவிட்டால் வட்டி, தாமதக் கட்டணம் எனப் பெரிய சுமையாகி விடும். தீபாவளிச் செலவுக்காக தனிநபர் கடன், ஆப் மூலம் கடன் என்றெல்லாம் வாங்குவதைத் தவிர்ப்பதே நல்லது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *