கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் புறநகர் மாவட்டச் செயலாளர் செ.ம. வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “செ.ம.வேலுச்சாமி அண்ணன் தனக்கு பொறுப்பு வழங்கியது பற்றி வருத்தப்பட வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை தலைமைக்கும் எங்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. இது ஆரோக்கியமான பிரச்னை.

முதன் முதலில் பிரச்னை எங்கு வருகிறது என்றால், தி.மு.க-வுடன் அ.தி.மு.க செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் போதுதான், பிரச்னை வருகிறது. எங்களை த.வெ.க-விக்கு ஆதரவு ஓட்டு போட்ட துரோகி என்று கூறுகிறார்கள்.
தி.மு.க எதிர்ப்பு என்ற வகையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போட்டோம். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தி.மு.க-வுடன் செல்லலாம் என்று கூறியவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

பொதுக்குழு கூட்ட வேண்டும். கமிட்டி போட வேண்டும். மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தான் நாங்கள் வைத்து வருகிறோம். நாங்கள் எல்லாம் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிவிட்டோம்.
அடுத்த தலைமுறை வரவேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அ.தி.மு.க நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் சுயநலமாகச் செயல்படுகிறார்கள். மனசாட்சி இல்லாமல் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.