எடப்பாடிக்கு அதிர்ச்சி மேல்  அதிர்ச்சி: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்! – Kumudam

Spread the love

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை மீது பல எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கச் சட்டமன்றத்தில் ஆதரவு அளித்ததால், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தபோதிலும், அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி தராமல், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியே வழங்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளார். இவர் விரைவில் தவெகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த முடிவைத் தொடர்ந்து, இதுவரை ராஜினாமா செய்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அதிருப்தியில் இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இவர்களில் சி.விஜயபாஸ்கரைத் தவிர மற்ற அனைவரும் தவெகவில் இணைந்துவிட்டனர். இந்தத் தொடர் சரிவுகளால், சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பலம் தற்போது 41 ஆகக் குறைந்துள்ளது.

தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் (பெரம்பூர், திருச்சி கிழக்கு) வெற்றி பெற்று, அதில் திருச்சி கிழக்கை ராஜினாமா செய்திருந்தார். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் தொகுதியையும் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *