எடப்பாடிக்கு டெல்லி செக்… அ.தி.மு.க.வில் புதிய அரசியல் ஆட்டம்! – Kumudam

Spread the love

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு இது ரொம்பவே சோதனையான காலகட்டம். சீட்டுக்கட்டுபோல கட்சி நாளுக்கு நாள் சரிந்துவருகிறது. சனிக்கிழமையானால் போதும்… நிர்வாகிகள் கொத்துக் கொத்தாக பனையூர் பக்கம் பாய்கிறார்கள். ரகசியம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் கட்சியின் உள்விவகாரங்கள் நிமிடத்துக்கு நிமிடம் டெல்லி மேலிடத்தில் அப்டேட் ஆகின்றன. டெல்லியின் உளவாளி யார் என்று தெரிந்தாலும், எடப்பாடியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எடப்பாடியின் நாற்காலியில் டி.டி.வி. தினகரன் – சசிகலா காம்போவை அமரவைக்க டெல்லி மும்முரம் காட்டுவதாக வரும் தகவல்கள் எடப்பாடி முகாமை அதிர வைக்கின்றன. இப்படியான சக்கரவியூகத்தில் சிக்கியிருக்கும் எடப்பாடி, இந்த வியூகத்தை உடைப்பாரா என்பதுதான் தமிழக அரசியலில் எழுந்திருக்கும் பரபர கேள்வி!

இதுகுறித்த வேட்டஸ்ட் அப்டேட் தெரிந்த இலைக்கட்சி சீனியர் ஒருவரிடம் பேசினோம். சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாவது இடத்துக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஆட்சியை இழந்தால், இடைபட்ட ஐந்தாண்டுகளில் கட்சியை உயிர்ப்பித்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் அ.தி.மு.க இப்போதும் அதே மனக்கணக்கில்தான் இருந்தார் எடப்பாடி. ஆனால் நடந்ததோ வேறு, தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்து கூட்டணி மந்திரிசபையில் இடம் பிடித்துவிட்டால், வருங்காலத்தில் மொத்த கட்சியையும் தன்வசப்படுத்திவிடலாம் என கணக்கு போட்டார் வேலுமணி.

ஆனால், அதற்கு அதிரடியாக செக் வைத்த எடப்பாடி, வேலுமணியை அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அடிப்படை உறுப்பினர் லெவலுக்கு தள்ளினார். 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும், பிறகு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் எடப்பாடிக்கு இணையான அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருந்தவர் வேலுமணி.

அப்படிப்பட்டவரால், இப்போது அதிகாரம் எதுவும் இல்லாமல் டம்மியாக முடியவில்லை. அதேசமயம் எடப்பாடிக்கு தான் யாரென காட்டவேண்டும் என்ற கோபமும் வேலுமணிக்கு மேலோங்கியது. இதற்காகவே திமு.க.வில் இருந்து வந்த ஒரு நல்ல ஆஃபரைக்கூட அவர் நிராகரித்தார் எடப்பாடியை ரிவெஞ்ச் எடுக்க ஒரே சாய்ஸ் டெல்லிதான் என நினைத்த வேலுமணி தரப்பு, பா.ஜ.க. மேலிடத்தை கையிலெடுத்துள்ளது.

முதலில் வேலுமணியை சாதாரணமாகத்தான் எடுத்துக்கொண்டது டெல்லி, பின்பு ஆற அமர யோசித்துவிட்டு, கடந்த தேர்தலில் எடப்பாடியின் பேச்சைக் கேட்டு அவருக்கு சாதகமாக தமிழக பா.ஜ.கவை இயக்கி படுகுழியில் வீழ்ந்ததை கணக்குப் போட்டு பார்த்த பாஜக, வேலுமணிக்கு க்ரீன் சிக்னலை கொடுத்தது. இதைத்தொடர்ந்து, வேலுமணி முழுக்க முழுக்க டெல்லியின் உளவாளியாகவே மாறிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது.

எடப்பாடிக்கு நேரம் ஒதுக்காத டெல்லி!

கட்சியை எடப்பாடி எப்படி நடத்துகிறார், கட்சியில் இருக்கும் ஓட்டை உடைசல்கள் என்ன, யாரெல்லாம் பலவீனமான நிர்வாகிகள், 2021 மற்றும் 2026 சட்டசபைத் தேர்தல்களில் எடப்பாடி செய்த குளறுபடிகள், திட்டம் போட்டு பா.ஜ.க.வை அதலபாதாளத்துக்கு கொண்டுசெல்ல செய்த காரியங்கள், படுதோல்வி அடையும் என்று தெரிந்தே பல தொகுதிகளை பாஜ.கவுக்கு தள்ளிவிட்டது.

கட்சிக்கு வந்த நிதியில் குளறுபடி செய்தது. தன் மகன் உள்ளிட்ட நெருக்கமான உறவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது என பல பகீர் உள்விவரங்களை டெல்லி மேலிடத்தில் அடுக்கியிருக்கிறார் வேலுமணி. இவற்றை எல்லாம் பல்வேறு சோர்ஸ் மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட டெல்லி பாஜகவும் எடப்பாடி மீது கடும் கோபத்தில்தான் இருக்கிறது. அதனால்தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மோடி, அமித்ஷா மற்றும் கவர்னர் அர்லேகர் ஆகியோர் எடப்பாடியை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவில்லை.

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரப்போகிறது. தேர்தல் சமயத்தில் தி.மு.க.வை தனது கூட்டணிக்குள் எளிதில் கொண்டுவர முடியாது என நினைக்கிறது பா.ஜ.க. அதேசமயம் தனித்தும் போட்டியிட முடியாது என்பதால் தேர்தலை சந்திக்க 20 சதவிகித வாக்குகளை கையில் வைத்திருக்கிற அதிமு.க தேவை என நினைக்கிறது பா.ஜ.க. அப்படி கூட்டணி தொடர்ந்தாலும், எடப்பாடியை வைத்து கூட்டணிக் கப்பலை ஒரு இஞ்ச்கூட நகர்த்த முடியாது என்றும் அக்கட்சி மேலிடம் நினைக்கிறது. எனவே, இன்னும் சில மாதங்களில் எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நகர்த்திவிட்டு, அதே இடத்தில் டி.டி.வி.தினகரனை அமர்த்த டெல்லி முடிவு செய்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

உள்ளே வருகிறாரா டி.டி.வி?

2023ல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியிருந்தார் எடப்பாடி, அப்போது அ.தி.மு.க.வின் மொத்த நெட்வொர்க்கையும் அப்படியே அண்ணாமலைக்கு தாரைவார்த்தார் தினகரன். அதை அவர் டெல்லி மேலிடத்துக்கு பாஸ் பண்ண, அதன் மூலம் அதிமுகவை எப்படி நடத்த வேண்டும் என்பதில் பாஜகவும் ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கிறது. இப்படியாக வேலுமணி சொன்ன அதிமுக அரித்மேட்டிக்ஸும், தினகரன் கொடுத்த அப்டேட்களும் ஒத்துப்போகவே கூட்டிக் கழித்து பார்த்த டெல்லி, எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து இறக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

அதேபோல் கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்க சசிகலாவும் மிக முக்கியம் என்பதை டெல்லி உணர்ந்திருக்கிறது. அதனால், அவரையும் கட்சிக்குள் ஏதாவது ஒரு பொறுப்பில் அமரவைக்கும் மூடில் இருக்கிறது டெல்லி சசிகலாவும் பா.ஜ.க.வுடன் கரம் கோப்பதில் ஆர்வமாக இருக்க, அவருக்கும் டெல்லிக்கும் இடையே நட்பு பாலமாக திவாகரன் இயங்கிவருகிறார்.

ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் களம் இறங்கிய சசிகலா கட்சி, 1,04,006 வாக்குகளை பெற்றது. சாத்தூர், முதுகுளத்தூர், தென்காசி, உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் சசிகலா கட்சி பெற்ற வாக்குகளால் என்.டி.ஏ. அணி படுதோல்வியை தழுவியது. முன்னதாக தென்மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெற டி.டி.வி.யை இணைத்துக்கொண்ட எடப்பாடி, சசிகலாவை மட்டும் ஒதுக்கி வைத்ததால், இந்த வாக்குகள் கிடைக்காமல் அதிமுக பின்னடைவை சந்தித்தது.

இன்னொரு பக்கம் தற்போது தினகரன் தரப்பு. தேர்தல் தோல்வி, நிர்வாகிகளின் ஓட்டம் மற்றும் ஜெயித்த ஒரு எம்.எல்.ஏ.வும் விலகிப்போனது போன்ற காரணங்களால், தனிக்கட்சியைத் தொடரும் முடிவை கைவிடும் நிலையில் இருக்க. அ.தி.மு.க.வில் நிலவும் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது.

முரண்டுபிடிக்கும் தளகர்த்தர்கள்!

இப்போதைய நிலவரப்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மட்டுமே எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார். வேலுமணியைப் போலவே, சி.வி.சண்முகமும் எடப்பாடியுடன் உரசலில்தான் இருக்கிறார். ‘என்னை புறக்கணித்தால், தன் சமுதாயத்தையும் புறக்கணித்ததுபோல ஆகிவிடும்’ என கேட்டு தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாசெ. பதவியை (6 தொகுதிகள்) திரும்பக் கேட்கிறார் சண்முகம். ஏற்கெனவே பல்வேறு அழுத்தங்களுக்கு உட்பட்டிருக்கும் எடப்பாடி தரப்பும் சற்று இறங்கிவந்து, ‘இப்போதைய மா.செ. பசுபதி இரண்டு தொகுதிகளுக்கு மா.செ.வாக இருப்பார். நீங்கள் நான்கு தொகுதிகளுக்கு மா.செ.வாக இருங்கள். மாநிலப் பொறுப்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியும் சண்முகம் பிடி கொடுக்கவில்லை. கொங்கு மண்டலத்தின் முக்கியத் தூணான தங்கமணியும் த.வெ.க. பக்கம் ஜாகையை மாற்றும் முடிவில் இருக்கிறார். இப்படியாக எடப்பாடி தற்போது கடினமான சக்கரவியூகத்தில் சிக்கியிருக்கிறார். இதிலிருந்து அவர் எப்படி மீளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என விவரித்து முடித்தார்.

எடப்பாடி இல்லாமல் அ.தி.மு.க. இல்லை!

இதுகுறித்து, எடப்பாடி ஆதரவாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய சிலரிடம் பேசினோம். அ.தி.மு.க.வுக்கு எடப்பாடியைத் தவிர தகுதியுடைய ஒரு பொதுச்செயலாளரை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவரை அகற்றுவதற்கு சசிகலா, டி.டி.வி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ள அண்டர்கிரவுண்ட் பாலிடிக்ஸை எடப்பாடி நன்றாகவே உணர்ந்திருக்கிறார். 

தனது தலைமைப் பண்பை நிலைநிறுத்தும் வகையில்தான் த.வெ.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்தார். அதன் காரணமாகவே அடிமட்டத் தொண்டர்களிடம் எடப்பாடியின் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. இந்த நிலையில், பதவி ஆசையால் த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்து அதிமுகவை சரிபாதியாக உடைத்துவிட்டார்களே என்ற தொண்டர்களின் கோபம், வேலுமணி, சிவி.சண்மும் அண்ட் கோ மீது பயங்கரமாக திரும்பியது. இதன் காரணமாகவே, கொங்கு மண்டலங்களில் மட்டுமல்ல.

கோவை மாவட்டத்திலும்கூட வேலுமணிக்கு செல்வாக்கு பறிபோனது. தேவர், நாடார், கொங்கு கவுண்டர், வன்னியர் என தமிழகத்தின் பெரும்பான்மையான சமுதாயத்தைச் சேர்ந்த எந்தவொரு முன்னாள் அமைச்சருக்கும் தனித்த செல்வாக்கு இன்றைக்கு கிடையாது என்பதை டெல்லி பா.ஜ.க. மேலிடம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேநேரத்தில், டி.டி.வி. தினகரனுக்கு ஒரு உச்சபட்ச பதவி கிடைப்பதை சசிகலா ஏற்றுக்கொள்ளமாட்டார். அதேபோல சசிகலாவுக்கு அதிமுகவில் முக்கிய பதவி கிடைப்பதை தினகரனும் ரசிக்கமாட்டார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே ஒற்றுமை இல்லை என்பது எடப்பாடிக்கு பிளஸ்தான்.

இன்றைய தேதியில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பெயரை உச்சரிக்கிற தொண்டர்கள்தான் அதிகம். அதிமுக என்றால் எடப்பாடி தான். அதனால்தான் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம் உள்ளிட்ட அனைத்து முன்னணி நிர்வாகிகளும் எடப்பாடி தலைமையை ஆதரிக்கிறார்கள். இவர்களின் ஆதரவு இருக்கும் வரை எடப்பாடியை யாராலும் வீழ்த்திவிட முடியாது.

அண்ணாமலை இல்லாத தமிழக பா.ஜ.க. வலுவிழந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வின் தலைமையை அகற்ற பா.ஜ.க. மேலிடமும் முன்வராது. இதன் காரணமாகவே தனக்கு எதிராக எப்படிப்பட்ட சதிவலையை விரித்தாலும் அதை எளிதாக கிழித்து எறிந்துவிட முடியும் என்ற நம்பிக்கை மிகுந்தவராகவே எடப்பாடி திகழ்கிறார்” என்றனர் நம்பிக்கையுடன்.

என்ன செய்யப்போகிறார் இரும்பு தேசத்து கரும்பு மனிதர்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *