தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து இப்போது வரை அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் முடிந்தபாடில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக சந்திக்கும் பதினோறாவது தோல்வி இது.
இதனால், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்… இருக்கின்றனர்.
இந்த அதிருப்தியில் எடப்பாடி பழனிசாமி & டீம், சி.வி.சண்முகம் & டீம் என்று இரு அணிகள் அதிமுக-விற்குள்ளேயே உருவாகின. இதில் சி.வி.சண்முகம் & டீம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதன்மை முகமாக முன்னிறுத்தியது.

சி.வி.சண்முகம் & டீம் விரைவில் பழனிசாமி பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. ஆனால், இதற்குப் பழனிசாமி செவிசாய்ப்பதாக இல்லை.
இதே நேரத்தில், தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம் & டீம் தவெக-விற்குச் சாதகமாக வாக்களித்தது. இதன் பின், அதிமுக-வின் சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை முன்னிறுத்தி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கடிதத்தையும் அளித்தனர்.