“எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

Spread the love

அ.தி.மு.க-வில் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாக செயல்பட்டுவரும் எம்.எல்.ஏ-க்கள் தினம் தினம் அதிரிபுதிரி கிளப்பிக்கொண்டிருக்க… எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினரும் சி.வி.சண்முகம் தரப்புக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…

“அ.தி.மு.க-வின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகள்தான் காரணம் என கட்சிக்குள்ளிருந்தே கலகக்குரல் எழுப்பிவருகிறதே சி.வி.சண்முகம் தலைமையிலான அணி?”

“தேர்தலின்போது எடப்பாடியார் எடுத்த முடிவுகள் எல்லாம் சரிதான் என்பது இன்றைக்கு அவரை எதிர்த்துப் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக இல்லாததை எல்லாம் இழுத்துக்கட்டி புகார் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய் என்ற ஒரு புதுமுகம் அரசியல் களத்திற்கு வந்திருப்பதால், ‘இவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்’ என்ற மனநிலையில் மக்கள் அவருக்கு வாக்களித்துவிட்டார்கள். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இன்றைக்கு த.வெ.க-வின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எஸ்.பி வேலுமணி - சி.வி சண்முகம்
எஸ்.பி வேலுமணி – சி.வி சண்முகம்

இன்றைக்கு அ.தி.மு.க-விலிருந்து த.வெ.க-வில் இணைந்திருப்பவர்கள் எல்லாம் கடந்த காலத்தில், எடப்பாடியாரை எப்படியெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள் என்பது பழைய செய்திகளை எடுத்துப் பார்த்தாலே தெரியும்.”

“2026 தேர்தலில் தி.மு.க ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்த எடப்பாடியார், தேர்தலுக்குப் பின் அதே தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அது பிடிக்காமல்தான் நாங்கள் த.வெ.க-வுக்கு ஆதரவளித்தோம் என எதிரணியினர் சொல்கிறார்களே?”

” ‘இவர்கள் இருவரும் சேர்ந்தால் ஆட்சி அமைக்கலாம். இப்படி நடக்கலாம்; அப்படி நடக்கலாம்’ என்று கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் யாரேனும் பேசியிருக்கலாம். ஆனால், இதையே பொய்யாக திரித்து, எடப்பாடியார் மீதே சேற்றை வாரியிறைப்பவர்கள், கட்சியின் ஆணிவேரிலேயே ஆசிட் ஊற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

ஏனெனில், அ.தி.மு.க கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் மொத்தம் ஒன்றேகால் கோடி வாக்குகள் கிடைத்திருக்கிறது. எடப்பாடியார் முதல்வராக வேண்டும் என்பதற்காக மக்கள் அளித்த வாக்குகள் இவை. இன்றைக்கு அவரை எதிர்ப்பவர்கள், களத்தில் மக்களைச் சந்தித்து இந்தளவு வாக்குகளை வாங்கக்கூடிய திறமைசாலிகளா?

இவர்கள் எல்லாம் மாவட்ட அளவிலே கட்சி நிர்வாகிகளாக அல்லது தலைவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முழுக்க பேசப்படக்கூடிய ஒரு தலைவர் என்றால், அது எடப்பாடியார் மட்டும்தான் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இதை யாராலும் மாற்றவும் முடியாது. இந்த நிலையை யாரேனும் தகர்க்க முயன்றால், அதைத் தடுக்கின்ற இடத்தில் என்னைப் போன்றவர்கள் இருப்பார்கள்.”

எடப்பாடி பழனிசாமி

“ஆனால், ‘எடப்பாடியாரை நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும்? அவருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது நாங்கள் வளர்த்த கட்சி’ என்றெல்லாம் எஸ்.பி.வேலுமணி சொல்லியிருக்கிறாரே?”

“அ.தி.மு.க எங்கள் கட்சி, நாங்கள் வளர்த்த கட்சி என்று அவர் சொல்வது, உரிமை சார்ந்த அவரது உணர்வு. அதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், கட்சியில் நாங்கள் வைத்த்துதான் சட்டம் என்று சொன்னால் அது தவறு.

ஏனெனில், அ.தி.மு.க-வில் உள்ள ஒருசில தளபதிகள் மட்டுமே முடிவெடுத்து எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆகவில்லை.

குமரி மாவட்டத்திலிருந்து கும்மிடிப்பூண்டி வரையிலான அ.தி.மு.க நகர செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், தேர்தல் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என அத்தனை பேரும் ஏக மனதாக ஆதரவு கொடுத்துத்தான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.”

“எடப்பாடியார் குறித்து அ.தி.மு.க பெண் நிர்வாகிகள் விமர்சித்தால், அவர்களை அவதூறு செய்யுமாறு கட்சித் தலைமையே தூண்டிவிடுவதாக சி.வி.சண்முகம் சொல்கிறாரே?”

“நான் கட்சியில் மாவட்டச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறேன். இதுநாள்வரையிலும் எங்களை பொதுச்செயலாளர் தொடர்புகொண்டு, ‘இப்படி எல்லாம் பேசுங்கள்’ என எந்த சூழ்நிலையிலும் ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது.

ஆங்காங்கே ஒருசிலர் கருத்துகளைச் சொல்கிறார்கள் என்றால், அது அவரவர் சொந்தக் கருத்து. மற்றபடி ‘தரம் தாழ்த்திப் பேசு’ என்று கட்சித் தலைமை யாரிடமும் சொன்னது கிடையாது.”

கே.டி.ராஜேந்திர பாலாஜி

“கட்சியினர் கருத்தை கேட்க மறுக்கிறார், கட்சியைவிட்டுச் சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் சேர்த்துக்கொள்ளத் தயங்குகிறார் என்று எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனரே?”

“கட்சியினர் கருத்துகளை பொதுச்செயலாளர் கேட்க மறுக்கிறார் என்பது தவறான செய்தி. சொல்லக்கூடியவர்கள் சொன்னால், கேட்கக்கூடிய இடத்தில்தான் அவர் இருக்கிறார். இன்றைக்கு எடப்பாடியாரை குற்றம் சொல்பவர்கள் எல்லாம், கடந்தகாலத்தில் இதே எடப்பாடியார் எடுத்த முடிவுகளுக்கெல்லாம் பின்புலமாக இருந்தவர்கள்தான். எனவே இன்றைக்கு இவர்கள் சொல்வதை எல்லாம், அ.தி.மு.க-வின் எந்தவொரு தொண்டனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

அம்மா (ஜெயலலிதா) காலத்திலும் கட்சித் தோல்வியின்போது கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்கள் உண்டு. பின்னாளில் அவர்களே அம்மாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்த வரலாறும் உண்டு. ஆனால், எந்த சூழலிலும் கட்சித் தொண்டர்கள் அம்மாவைக் (ஜெயலலிதா) குறை சொல்லவில்லை!”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *