மதுரை மாவட்டம். தீர்த்தகாடு பகுதியைச் சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த 40 ஆண்டுகளாக பட்டா வழங்காத நிலையில் தற்போது பட்டா வழங்கியுள்ளோம். இன்னும் 300 பேருக்கு வழங்க வேண்டியது உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டா என்பது வடிவேலு சொல்வதுபோல, `ரசீது இருக்குது கிடைத்ததைக் காணோம்” என்றது போல்தான் உள்ளது.
மனுதாரர்களுக்கு பட்டா கிடைப்பதற்கான வழிவகை செய்ய செயல்திட்டம் உள்ளது. 80 ஆண்டுகள் சுதந்திர நாட்டில் இன்றும் மனைபட்டாவிற்காக கையேந்தி நிற்பது மண்ணின் மைந்தர்கள் பூர்வ குடிகள்தான்; மேட்டுக்குடிகள் அல்ல…
இதனை தீர்க்கக்கூடிய அரசு வந்திருக்கிறது. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், இதனை நாங்களே செய்கிறோம். கோரிக்கை வைக்கும் இடம் மாறி, அதனை செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறோம். இதுதான் முக்கியமான தலைகீழ் மாற்றம்.
கடந்த ஆட்சியில் உள்ள பிரச்னைகள் பற்றி பேச விரும்பவில்லை. மேதகு சொன்னதுபோல, சொல்லுக்கு முன் செயல் இதுதான் என்னுடைய வார்த்தை.
தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மக்களுக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு சாட்சிதான். அடித்தட்டு மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சட்ட ஒழுங்கு பிரச்னை ,விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை எல்லா காலத்தில் இருக்கும் பிரச்னை-தான். அதற்காக போராடியிருக்கிறோம். சட்ட ஒழுங்கு பிரச்னையை எதிர்த்துப் போராடுகின்ற எதிர்க்கட்சிகள் வந்து அரசு என்ன மாதிரியாக நடக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டச் சொல்லுங்கள்… அதனைச் செய்யலாம்; போற போக்கில் அவதூறுகளை விதைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்களுக்கான வழியில் செல்கிறோம், இதனை திசை திருப்பும் வேலை வேண்டாம்.
வேங்கைவயல் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை, தென் மாவட்டங்களில் நடந்த படுகொலைகள், அனைத்து பிரச்னைகளிலும் கடைசியாக கவின் படுகொலையில் நான்கு நாள்களும் அதே களத்தில் நின்று போராடினோம்.