எட்டெழுத்து மந்திரம் தந்த கோயில்…திருப்பம் தரும் திருக்கோஷ்டியூர்! – Kumudam

Spread the love

ஆலய உலா! – வி.ராம்ஜி

மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர். சிவகங்கையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த ஊர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் திவ்விய க்ஷேத்திரம். திருக்கோஷ்டியூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்துக்கு வந்து, நான்கு பெருமாள் குடிகொண்டிருக்கும் இந்தத் தலத்துக்கு வந்து, பெருமாளின் நான்கு திருக்கோலங்களையும் தரிசித்தாலே மனதுக்கு நிம்மதி; இங்கே கோயிலில் இருந்து விளக்கு எடுத்து வந்து வீட்டில் பூஜித்து வந்தால், நம் வாழ்க்கையில் வெளிச்சம் நிகழ்வது சத்தியம்!

கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அழகுக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள். மது கைடபர்களும் ஸ்ரீபிரம்மாவும் ஸ்ரீசரஸ்வதிதேவியும் என அருகில் இருந்தபடி காட்சி தருகிறார்கள். வருடத்தில், திருக்கோஷ்டியூர் கோயிலில் மூன்று விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி வைபவம், மாசி மகத் திருவிழா என மூன்று விழாக்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன. இப்போது நவராத்திரிப் பெருவிழாவுக்காக ஏற்பாடுகள் கனஜோராக நடந்துகொண்டிருக்கின்றன. இந்த மூன்று விழாக்களின் போது, திருக்கோஷ்டியூர் வந்து தரிசிக்கிற வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளம்!

இங்கே… கருவறையில் சந்தானக்கண்ணன் எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார் குழந்தைக் கண்ணன். அதாவது பாலகிருஷ்ணன்! சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம். சந்தான பாக்கியம் என்பது குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பது என்று அர்த்தம்! தொட்டிலில் உள்ள சந்தானக் கண்ணனை, பிரார்த்தனைக் கண்ணன் என்றே அழைக்கிறார்கள் பக்தர்கள்.

இவரை வணங்கி வழிபட்டு வேண்டிக்கொண்டு வந்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது உறுதி! அப்படி பிள்ளை பாக்கியம் பெற்றவர்கள் செளம்யா என்றும் செளம்யன், செளம்ய நாராயணன் என்றும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்!

ஸ்ரீமகாலக்ஷ்மி தாயார், தனிச்சந்நிதியில் அற்புதமாகக்  காட்சி தருகிறார். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமகாலக்ஷ்மித் தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் முதலான பிரச்சினைகள் அனைத்தும் அகலும், கடன் தொல்லைகளில் இருந்தும் சொத்துப் பிரச்னைகளில் இருந்தும் மீளலாம் என்கிறார் கோயிலின் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.

ஓம் என்றும் நமோ என்றும் நாராயணா என்றும் மூன்று சொற்களாக அமைந்துள்ள எட்டெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வகையில் மூன்று தளங்கள் திருக்கோஷ்டியூர் தலத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குகளாக அமைந்திருக்கின்றன. கீழ்த்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் என்றும் பூலோகப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். கூடுதலாக, நான்காவது தளத்திலும் காட்சி தருகிறார் பெருமாள்.

விமானத்தின் கீழ்த்தளத்தை அடுத்து முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் திருப்பாற்கடல் பெருமாள். இவருக்குத்தான் ஸ்ரீசெளம்ய நாராயண பெருமாள் எனும் திருநாமம்! இரண்டாவது தளத்தில், உபேந்திர பெருமாளாகக் காட்சி தருகிறார் திருமால். அதாவது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூன்றாம் அடுக்கில் பரமபத பெருமாளாக வைகுண்ட பெருமாளாக அமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார். திருக்கோஷ்டியூர் தலத்துக்கு வந்தால், நான்கு திருக்கோலங்களில் உள்ள பெருமாளை திவ்வியமாகத் தரிசனம் செய்யலாம் என்கிறார் ஸ்ரீகாந்த் பட்டாச்சார்யர்.

திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்த திருத்தலம் எனும் பெருமையும் இந்த ஊருக்கு உண்டு.  ஸ்ரீராமானுஜர், மக்களுக்கு எட்டெழுத்து மந்திர மகிமையையும் மந்திரத்தையும் எடுத்துரைத்த புண்ணிய பூமியும் இந்த திருக்கோஷ்டியூர் தலம்தான்! திருக்கோஷ்டியூர் தலத்துக்கு வந்தாலே புண்ணியம். பெருமாளை ஸேவித்தாலே மகா புண்ணியம்! திருப்பம் தந்து வாழ்வை உயர்த்துகிற திருக்கோஷ்டியூருக்குச் சென்று வழிபடுவோம்; வளம் பெறுவோம்!

ஓம் நமோ நாராயணா:!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *