தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராகப் போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
புதிய சபாநாயகருக்கு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் சட்டசபையில் பேசிய விசிக எம்எல்ஏ வன்னியரசு, “”பெரும்பான்மை மக்களை விட சிறுபான்மை மக்களின் குரல் வலுப்பெற வேண்டும்.

அப்போதுதான் நாடு செழுமை பெறும்’ என்று அம்பேத்கர் கூறியதைப் போல இந்தச் சட்டசபையில் ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளின் குரல் வலிமை பெற வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் நியாயங்களை சபாநாயகர் புரிந்துகொள்ள வேண்டும். பாகுபாடு இல்லாமல் சட்டசபையை சபாநாயகர் வழிநடத்த வேண்டும். விசிக சார்பில் இரண்டு உறுப்பினர்கள் அவைக்கு வந்திருக்கிறோம். எங்களின் குரல் தமிழ்நாட்டின் குரல். தேசத்தின் குரல். அது அவையில் மறுக்கப்படக்கூடாது.
இன்று 717 மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதல்வர் கையெழுத்திட்டதை விசிக வரவேற்கிறது. அதேபோல முன்னாள் முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து முதல்வர் மேற்கொண்ட நாகரிக அரசியலை வரவேற்கிறோம்” என்று வன்னியரசு பேசியிருக்கிறார்.