"எதிர்க்கட்சியினருக்கு சிகிச்சை பெறக்கூட உரிமையில்லை" – திரிணாமுல் MP மீது தாக்குதல்; மம்தா கண்டனம்

Spread the love

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நேற்று தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சோனர்பூர் என்ற இடத்திற்குச் சென்றார்.

தேர்தலில் அக்கட்சி சந்தித்த பெரும் தோல்வியைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்களைப் பார்ப்பதற்காக அப்பகுதிக்குச் சென்றார். சோனார்பூர்-ராஜ்ப்பூர் நகராட்சியின் 9-வது வார்டுக்கு உட்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சு கர்மகாரின் இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டுப் பின்னர் அங்கிருந்து நடந்து செல்ல முயன்றபோது, ​​போராட்டக்காரர்கள் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர்.

அவர்கள், ‘திருடன், திருடன்’ என்று கூச்சலிட்டவாறே, அவர் மீது முட்டைகள், கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். அவரது சட்டையைக் கிழித்து, நெஞ்சில் குத்தி, கன்னத்தில் அறைந்து, கண்ணாடியை உடைத்ததுடன், இடைவிடாமல் ஆபாச வார்த்தைகளாலும் அவரைத் திட்டினர்.

அங்கு பாதுகாப்புக்கு போலீஸார் யாரும் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் பாதுகாப்புக்கு ஹெல்மெட் அணிந்த படி கிரிக்கெட் வீரர் போன்று கூட்டத்திற்குள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்தது.

தாக்குதல்
தாக்குதல்

போலீஸார் இல்லாத நிலையில், 10 நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டிருந்தது. ஒரு சில கட்சித் தொண்டர்கள் அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்து, அவரை எப்படியோ கர்மகரின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

ஆத்திரமடைந்த கூட்டம் வீட்டின் வெளியே முற்றுகையிட்டு, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைவதாக மிரட்டிக்கொண்டிருந்ததால், அவர் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கியிருக்க நேர்ந்தது.

இறுதியில், மத்தியப் படை வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அபிஷேக் பானர்ஜி அளித்த பேட்டியில், ”இது பாஜக தொண்டர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். அவர்கள் என்னைக் கொல்ல முயன்றனர். நான் அங்கு வரவிருப்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. காவல் துறைக்கு இது குறித்து முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜக ஆதரவாளர்கள் முன்னரே அங்கு திரண்டிருந்து, என் மீது செங்கற்களையும் கற்களையும் வீசினர்” என்று அபிஷேக் கூறினார்.

சமீபத்தில் அபிஷேக் பானர்ஜியின் பாதுகாப்பை மாநில அரசு குறைத்தது. இத்தாக்குதல் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தளப் பதிவில், ”ஆட்சியாளர்கள் கொலைகாரர்களாக மாறிவிட்டனர். உங்களுக்கு (பா.ஜ.க) வெட்கமாக இல்லை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ஆனால் இத்தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் சமிக் பட்டாச்சாரியா கூறுகையில், ”இந்தத் தாக்குதலில் பா.ஜ.க-விற்குத் தொடர்பு இல்லை. அரசியல் விரோதம் இருக்கலாம், ஆனால் ஆரோக்கியமான, ஜனநாயக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் விரும்பத்தக்கவை அல்ல. எனது கட்சிக்கு இதில் முற்றிலும் எந்தத் தொடர்பும் இல்லை.

இருப்பினும், பல ஆண்டுகளாக திரிணாமூல் பாஜக தொண்டர்களுக்கு எதிராக இழைத்த அட்டூழியங்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். திரிணாமூல் வெற்றி பெற்றிருந்தால், இந்நேரம் எங்கள் 500 தொண்டர்கள் இறந்திருப்பார்கள். நாங்கள் நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளோம்,” என்று கூறினார்.

அபிஷேக் கொல்கத்தா திரும்பியதும், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சில நிமிடங்களிலேயே சக்கர நாற்காலியில் வெளியேற்றப்பட்டு, தெற்கு கொல்கத்தாவில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இது குறித்து மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், “மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகளின் காரணமாக, அவருக்கு இங்கே சிகிச்சை அளிக்கப்படவில்லை. நாங்கள் அவரை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றினோம். மருத்துவமனை நிர்வாகத்தினர் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறியதால், அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு மாற்றும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

எங்கள் குடும்ப மருத்துவரின் மேற்பார்வையில், அவரது வீட்டிலேயே ஒரு சிறிய மருத்துவமனையை அமைக்கும் கட்டாயத்திற்கு நாங்கள் ஆளாகியுள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குச் சிகிச்சை பெறும் உரிமை கூட இல்லாத, எத்தகையதொரு வங்காளத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *