பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் மத்திய அரசிலிருந்து வரவேண்டிய நிதி தடைப்பட்டிருப்பதைப் பற்றியும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் எதிர்கொள்ள வேண்டிய விமர்சனங்கள் குறித்தும் தெளிவாக விளக்கியிருக்கின்றனர்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட முதல்வர் விஜய், “மாநில உரிமைகள் மற்றும் நம்முடைய அடிப்படைக் கொள்கைகள் எதிலும் சறுக்காமல், எது சரியோ அதை செய்யுங்கள்’ என மத்திய அரசு முன்வைக்கும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் மனநிலையில் பேசியிருக்கிறார்.
முதல்வரின் எண்ணவோட்டத்தை அறிந்துகொண்டதால்தான் கூட்டத்தை விட்டு வந்த அமைச்சர் ராஜ் மோகனும் ‘நாங்கள் யாருக்கும் அடிபணியமாட்டோம். இருமொழிக் கொள்கைதான் எங்களின் அடிப்படை’ என வெளிப்படையாக பேசியிருந்தார்.

பி.எம்.ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கும் அதேவேளையில் துறைக்கு வந்து சேர வேண்டிய நிதியை லாவகமாக காய்களை நகர்த்தி வாங்கவும் திட்டமிடுமாறு கல்வித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அடுத்த சில நாட்களில் முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் மீதான மாற்றுக்கருத்தையும் மாநிலத்துக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை பற்றியும் முதல்வர் வலியுறுத்துவார் என்றும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.!