படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி
இப்போதெல்லாம் துள்ளல் பாடல்களை, குத்துப்பாட்டு, வைப் ஏற்றும் பாட்டு, ஐட்டம் ஸாங் என்றெல்லாம் ஆளாளுக்கு ஏதேதோ சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் எங்களுடைய எண்பதுகளில், ஆட்டம் போட வைக்கிற பாடல்களை தெம்மாங்குப் பாட்டு என்று சொல்லுவோம். நாட்டுப்புறப் பாட்டு என்று ஆடுவோம். டப்பாங்குத்துப் பாட்டு என்று கொண்டாடுவோம். அதற்கு முந்தைய காலகட்டங்களில், ‘சித்தாடை கட்டிக்கிட்டு’ என்ற பாடல், எண்பதுகளிலும் கூட சூப்பர் பாடலாக, இன்றைய வார்த்தையில் ‘வைப்’ ஏற்றும் பாடலாக இருந்து.
எழுபதுகளில் வந்த ‘அடி என்னடி ராக்கம்மா’வும் அப்படித்தான்! 1981ஆம் ஆண்டு ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்றொரு படம் வந்ததை, ‘என்ன மாப்ளே… இப்படியொரு படம் வந்துச்சா?’ என்றும் ‘மச்சான்… இந்தத் தலைப்புல ஒரு படம் வந்துச்சாம்டா. நாம ஸ்கூல் படிக்கிற வயசுல வந்த படமா இருந்தாத்தான் நாம பாத்திருப்போமே…’ என்றும் சொல்லி எஞ்ஜோட்டுப் பசங்களெல்லாம் ‘வரவே இல்லை’ என்று துண்டு போட்டு தாங்கி சத்தியமே கூட செய்வார்கள்.
ஆனால் படம் வந்தது. ‘மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை வர்றார் மாட்டுவண்டியிலே’ என்பது போல், இந்த மாப்பிள்ளை எந்த வண்டியில் வந்தார், எங்கே இறங்கினார், எப்போது இறங்கினார், எங்கே சென்றார் என்பதெல்லாம், யாம் அறியோம் பராபரமே…!
இந்தப் படத்தில் யார் நடித்திருந்தார்கள் என்பதெல்லாம் தெரியாது. இயக்கியவர் இருந்து, அவரிடம் கேட்டால், ‘அதையெல்லாம் கிளறி விடுறீங்க? அதுவொரு கெட்ட கனவா மறந்துட்டேன்’ என்றுதான் சொல்லுவார். சங்கர் கணேஷில், இப்போதிருக்கும் கணேஷைப் பிடித்துக் கேட்டால், உற்சாகம் பொங்கச் சொல்லுவார். ’இந்தப் படத்தை நினைவுபடுத்துறதே இந்தப் பாட்டுதான்’ என்று பெருமிதத்துடன் சொல்லுவார். ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ என்ற அந்தப் பாட்டு, இன்றைக்கு வரை மறக்கமுடியாத டப்பாங்குத்துப் பாட்டு!
இதற்கு இசையமைத்த சங்கர் கணேஷ் மட்டும் காரணமா? முக்கியமாக பாடியவரின் குரல், இந்தப் பாடலை பட்டிதொட்டிசிட்டி என நாலும்நாலும் எட்டுத்திசைகளுக்கும் கொண்டு சேர்த்தது. டிகேஎஸ். நடராஜன் எனும் நடிகரும் நாட்டுப்புறப்பாடகருமான இவர்தான், அந்த உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர்.
எம்ஜிஆர் காலத்து நடிகர். எத்தனையோ எம்ஜிஆர் படங்களிலும் சிவாஜி படங்களிலும் ஜெமினி, முத்துராமன் படங்களிலும் நடித்தவர். அப்படி அவர் வரும் காட்சிகளில், பெரிதாக அவரை எவரும் கவனிக்கக்கூட மாட்டோம். இத்தனைக்கும் சிறப்பாக நடிப்பார். ஒருகாட்சிக்கு மட்டுமே வந்தாலும் அந்தக் காட்சிக்கு பலம் சேர்க்கும் நடிப்பை வழங்கிவிடுவார். நடிப்புக்குக் கிடைத்த வாய்ப்பு குறைவுதான்.
ஆனால் மேடையில் இவரின் பாட்டுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. எல்லாத் திறமைகளும் இருந்தாலும் படத்தில் சிறிய காட்சியில்தான் வந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் குரலில் வந்த ஒரு பாடல்… அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ’டி.கே.எஸ்.நடராஜனா? யாருய்யா இது?’ என்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது. .
அதன் பிறகு பல பாடல்கள் டி.கே.எஸ்.நடராஜன் குரலில் தமிழகமெங்கும் ஒலித்தன. எண்பதுகளில் இவரின் பாடல்கள் ஒலிக்காத டீக்கடைகளே இல்லை. பின்னர், டி.கே.எஸ்.நடராஜன் போகாத ஊருமில்லை; ஏறாத மேடைகளும் இல்லை. தன் குரலால் தமிழக மக்களைச் சொக்கவைத்தார். இத்தனை வருட திரை வாழ்க்கையில் அவருக்குக் கிடைக்காத பேரும்புகழும், செல்வாக்கும் பொருளாதாரமும் அந்த ஒருபாடலுக்குப் பிறகுதான் கிடைத்தது. அந்தப் பாட்டுதான்… ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’.
1984ஆம் ஆண்டு, ’வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்கிற திரைப்படத்தில் நான்கு நிமிடப் பாடலாக இந்தப் பாட்டு வந்தது. இந்த நான்கு நிமிடப் பாட்டுதான், அப்போது தமிழகமெங்கும் ஒலித்தது. மொத்தத் தமிழகத்தையும் ஆக்கிரமித்தது. காற்றின் வேகத்தைச் சொல்லும் கருவி இருப்பது போல், காற்றில் உச்சரிக்கும் வார்த்தைகளைக் கண்டறியும் கருவி இருந்தால், அப்போது ஏகப்பட்டபேர், ’முனியம்மா’ என்று முணுமுணுத்தத்தை கண்டறிந்திருக்கலாம். ‘அட இம்புட்டுபேரா?’ என வியந்திருப்போம்.
அப்போதெல்லாம் கோயில் திருவிழாக்களில், ஒருநாள் பாட்டுக்கச்சேரிக்கும் இடமுண்டு. முக்கியமாக, பொங்கல் விழாவில் பாட்டுக்கச்சேரியும் இடம்பெறும். இரவு 9 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவு ஒருமணி வரைக்கும் பாட்டுக் கச்சேரி நடைபெறும். வெட்டவெளியில் பனியையும் இருட்டையும் பொருட்படுத்தாமல் வாசிக்கும் பாடல்களை நேசிப்புடன் கேட்டு ரசிப்பார்கள் மக்கள்.
அதிலும், ஒவ்வொரு பாடலையும் அறிவிக்கும்போது அது ‘என்னடி முனியம்மா’ பாடலாக இருக்காதா? இப்போது அந்தப் பாட்டைப் பாடமாட்டார்களா’ என்று ஆண் பெண் பேதமில்லாமல், ரசிகர்கள் நகம்கடித்து தவித்துக்கொண்டிருந்ததெல்லாம் நன்றாக நினைவுக்கு இருக்கிறது. இந்தப் பாடலை பாட்டுப்புஸ்தகம் வாங்கியெல்லாம் மனப்பாடம் செய்யத்தேவை இருக்கவில்லை.
ஒருமுறைக்கு மூன்று முறை கேட்கும்போதும் சரி… நம்மைச் சுற்றி இருக்கிற நண்பர்களோ மாமாக்களோ பாடலைப் பாடும்போதும் சரி… கேட்டுக்கேட்டு மனதில் பதிந்துவிட்டது. அப்படி எப்போது பாடுவார்கள் என்று ஏங்கித் தவித்துக் காத்துக்கொண்டிருந்த பயபுள்ளைகளில் நானும் ஒருவன்! பாடலுக்கான அறிவிப்பு வந்ததும், அந்த நள்ளிரவிலும் உற்சாகக் குரல் எழுப்புவார்கள். விசில் பறக்கும். கரவொலி அந்த இடத்தையே அதிரவைக்கும். பாட்டு தொடங்குவதற்கு முன்னதாகவே ஆடத்தொடங்கியிருப்பார்கள் அண்ணன்கள்!
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
என்ற பாட்டுக்கு இசையை விட வரிகளை விட நம்மையெல்லாம் சுண்டி இழுத்தது டிகேஎஸ். நடராஜனின் குரலாகத்தான் இருக்கும். பிறகு அவரின் குரல் வழியே வரிகளும் நம்மை ஒரு உற்சாக அருவிக்குள் குளிக்கவைக்கும். தாரை தப்பட்டையில் தப்பு மட்டும் எடுத்துக்கொண்டு, இடையிடையே தபேலாவையும் உருட்டு விளையாடியிருப்பார்கள் இசையமைப்பாளர்கள்.
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புல்ல
நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா…
இனி நாந்தாண்டி ஒம் புருஷன் பொன்னம்மா…
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்…
என்று பாடும்போது, பாடலைக் கேட்கக் கேட்க, ‘டாஸ்மாக் சரக்கு’ இல்லாமலேயே ரவுண்டுகட்டி ஆடினார்கள் பலரும்!
மாடு ரெண்டும் மதுர வெள்ள
மணிகள் ரெண்டும் தஞ்சாவூரு
குப்பி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா
அது கூடும் இடம் தாழப்பாதை பொன்னம்மா!
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
குத்தால அருவியிலே குளிச்சாலும் அடங்காது
அத்தானின் உடம்புச்சூடு கண்ணம்மா – நீ
அருகில் வந்தா சிலுசிலுக்கும் பொன்னம்மா
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி
யாரு வைச்ச மையி இது நான் வைச்ச மையி
பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி
சின்ன இடையழகி கண்ணம்மா
நீ சிரிச்சாலே முத்துதிரும் பொன்னம்மா
என்று கொஞ்சுவார்; கெஞ்சுவார். கொஞ்சிக் கெஞ்சி, கெஞ்சிக் கொஞ்சி என கிராமத்துப்பக்கத்தின் வாய்க்காக்கரையோரத்துக்கும் கறட்டு மேட்டுக்கும் தென்னந்தோப்புக்குமாக நம்மையும் அழைத்துச் சென்றுவிடுவார்.
கண்டாங்கி புடவை கட்டி
கை நிறைய கொசுவம் வச்சு
இடுப்புல சொருகுறியே கண்ணம்மா -அது
கொசுவம் அல்ல எம்மனசு பொன்னம்மா!
ஏரிக்கரை ஓரத்துலே ஏத்தம் எறைக்கியிலே
ஏரிக்கரை ஓரத்துல ஏத்தம் இறைக்கியிலே
இங்கிருந்து பாக்கையிலே கண்ணம்மா – நான்
எங்கேயோ போறேனடி பொன்னம்மா!
சிவசங்கர் என்பவர் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். தேவிஸ்ரீதான் நாயகி. இந்தப் பாடலுக்கு ஆடியவர்களும் இவர்கள்தான். ஆனால், படம் ஓடவில்லை. தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போனது. ’நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பது போல, ஊருக்கு ஊர், கிராமத்துக்கு கிராமம், டீக்கடை அண்ணன்களும் மியூஸிக் ரிக்கார்டிங் அண்ணன்களும் இந்தப் பாடல் ரிக்கார்டை வாங்கி, திரும்பத்திரும்பப் போட்டுக்கொண்டே இருந்தார்கள். இந்தப் பாடலைக் கேட்கும் ஆவலில், ‘இன்னும் ஒரு டீ… அப்படியே முனியம்மா பாட்டு’ என்று நான்கைந்து தேநீரை அடுத்தடுத்து குடித்துவிட்டு வராத பித்தம், இந்தப் பாடலின் மீது பலருக்கும் வந்தது.
‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ திரைப்படம் அமைந்தாலும், ‘என்னடி முனியம்மா’ பாட்டு மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர்கள் சங்கர் கணேஷ். மிக மிக எளிமையான வாத்தியங்களைக் கொண்டு, அசத்தியிருப்பார்கள். பயன்படுத்தப்பட்ட வாத்தியங்கள் அனைத்துமே, கிராமங்களில் வாசிக்கப்படும் எளிய வாத்தியங்கள் என்பது, இந்தப் பாடலை மக்களிடம் கொண்டுசெல்ல பெரிதும் உதவின. முக்கியமாக, டி.கே.எஸ்.நடராஜனின் குரல். நம்மூர்க் குரலாக, நம் குரலாக ஒலித்தது
மழையில நனையும்போது
மாந்தோப்புல ஒதுங்கும்போது
மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா – உம்
மேனி நடுங்கலாமோ பொன்னம்மா
உன்னழகை மறைச்சிருக்கும் உசந்த வெல லவுக்கத்துணி
உன்னழகை மறைச்சிருக்கும் உசந்த வெல லவுக்கத்துணி
ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா – அதில்
ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா
‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ என்று , அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடத்தொடங்குவார்கள் ரசிகர்கள். பாடல் முடியும்போது பார்த்தால், ஏகப்பட்ட பேர் ஆடிக்கொண்டிருப்பார்கள். பல ஊர்களில், ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, இன்னொரு முறை பாடியதெல்லாம் எண்பதுகளின் ஹிஸ்டரியில் பதிவாகியிருக்கிறது.
‘மனசே சரியில்ல’, ‘ஆபீஸ்ல செம டென்ஷன்’, ‘வீட்டுக்குப் போனாலே தகராறுதான்’, ‘கடன்லேருந்து எப்போ மீளுவோம் எப்படி மீளுவோம்னே தெரியல’ என்று நம் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் விதமான பிரச்னைகள். அதில் இருந்து ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ சொல்வதற்கு ‘முனியம்மாவும் கண்ணம்மா’வும் டிகேஎஸ்.நடராஜனும் இருக்க… ‘என்னடி முனியம்மா’வைக் கேளுங்கள். ‘கவலைப்படாதே சகோதரா…’ என்று, இந்தப் பாடல் லிங்க்-கை காப்பி செய்து, நண்பர்களுக்கு ஷேர் செய்வீர்கள்!

