என்னது இது முதல்முறை இல்லையா? கருணாநிதி, ஜெ.க்கு பதவிப்பிரமாணம் செய்த பெண் சபாநாயகரை தெரியுமா? – Kumudam

Spread the love

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில், மாற்றுத் தலைவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அவையை நடத்துவது வழக்கம். அந்த வகையில் சத்யபாமா அவையை வழிநடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

பெண் ஒருவர் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவது அரிதான நிகழ்வாக பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பே ஒரு பெண் எம்.எல்.ஏ அந்தப் பொறுப்பை வகித்திருந்த தகவலும் தற்போது மீண்டும் கவனம் பெற்று வருகிறது.

அவர் தான் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.எஸ். பொன்னம்மாள்.

வத்தலகுண்டு அருகேயுள்ள அழகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்மாள், தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலம் பயணித்தவர். பழனி மற்றும் நிலக்கோட்டை தொகுதிகளில் இருந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், காங்கிரஸ் மற்றும் பின்னர் த.மா.கா. சார்பிலும் அரசியல் பணியாற்றியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏழு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பொன்னம்மாள், அனைத்து கட்சியினராலும் அன்புடன் ‘அக்கா’ என்று அழைக்கப்பட்டவர். மக்கள் பிரச்னைகளை சட்டசபையில் தொடர்ந்து எடுத்துரைத்ததன் மூலம் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.

அவரது அரசியல் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்று, தற்காலிக சபாநாயகராக செயல்பட்டது. 1989-ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றபோதும், 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றபோதும், அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர் பொன்னம்மாள் தான்.

இதனால், தற்போது பெண் எம்.எல்.ஏ ஒருவர் மாற்றுத் தலைவராக பேரவையை வழிநடத்திய சம்பவம் பேசப்பட்டாலும், தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் பெண் ஒருவர் முக்கியமான பேரவைப் பொறுப்பை ஏற்று செயல்பட்ட முன்னுதாரணம் ஏற்கெனவே இருந்துள்ளது.

காமராஜர் காலம் முதல் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்களின் ஆட்சிக்காலங்களை நேரில் கண்ட பொன்னம்மாள், தமிழ்நாடு அரசியலில் நீண்ட காலம் பணியாற்றிய பெண் தலைவர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார்.

சட்டசபை இருக்கையில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ள இந்த நேரத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஏ.எஸ். பொன்னம்மாளின் அரசியல் பயணமும் மீண்டும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *