என்னது கார் இல்லையா? அப்போ ரூ.5 லட்சம் கார் யாருடையது? தேர்தல் ஆவணத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்! – Kumudam

Spread the love

சட்டப்பேரவையில் பேசிய சபரி ஐயங்கரன், தனது கல்லூரி காலத்தில் காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை உள்ளிட்டவற்றை சந்தித்ததாகவும், அப்போது சொந்தமாக கார் கூட இல்லை என்றும் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தனக்கு வேலைவாய்ப்பையும் காரையும் வழங்கியதாகக் கூறிய அவர், அதற்காக நன்றி தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவைக்கு ஆட்டோவில் வரும்போது பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் தன்னை யார் என கேட்பார்கள் என்றும், எம்.எல்.ஏ அடையாள அட்டையை காட்டினாலும் முதலில் நம்ப மாட்டார்கள் என்றும் சிரிப்புடன் குறிப்பிட்டார். தற்போது வரை ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சபரி ஐயங்கரனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், அவர் கூறிய தகவல் குறித்து தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான TATA TIGOR கார் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சட்டப்பேரவையில் கார் இல்லை என அவர் கூறியதற்கும், தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் கார் இருப்பதாக தெரிவித்திருப்பதற்கும் இடையே முரண்பாடு இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே சொந்தமாக கார் வைத்திருக்கும் நிலையில், கார் இல்லாதவர்களுக்கு மட்டும் அரசு வாகனம் வழங்கினால் போதுமானது என்றும், அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்குவது தேவையற்ற செலவு என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

சபரி ஐயங்கரன் பேசிய கருத்தும், தேர்தல் ஆவணத்தில் இடம்பெற்றுள்ள கார் குறித்த தகவலும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *