Cricket
oi-Yogeshwaran Moorthi
கவுகாத்தி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா 35வது சதத்தை விளாசி உள்ளார். இந்த சதத்தை விளாசிய பின் ரோகித் சர்மா, வேகமாக ஓடி காட்டி செய்த கொண்டாட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. 39 வயதாகிவிட்டாலும் தன்னால் இன்னும் வேகமாக ஓட முடியும் என்பதை ரோகித் சர்மா கொண்டாட்டத்தின் மூலமாக செய்து காட்டி இருக்கிறார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 406 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. தொடக்கம் முதலே வானுக்கும், மண்ணுக்கும் என்று சிக்சரும், பவுண்டரியுமாய் ரோகித் சர்மா அடிக்கு மேல் அடி கொடுத்தார்.

இதனால் 32 பந்துகளில் அரைசதத்தை எட்டிய ரோகித் சர்மா, கொஞ்சம் கூட அதிரடியை குறைக்கவில்லை. கண் மூடி திறப்பதற்குள் 85 ரன்களை எட்டிய பின், ரோகித் சர்மா கொஞ்சம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக 72 பந்துகளில் ரோகித் சர்மா சதத்தை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 35வது சதம் இதுவாகும்.
இந்த சதம் அடித்த பின் ரோகித் சர்மா செய்த கொண்டாட்டம் தான் ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. ஏனென்றால் சதம் அடித்த பின் க்ரீஸில் வேகமாக ஓடுவதை போல் செய்து காட்டிய ரோகித் சர்மா, பின் விராட் கோலி ஸ்டைலில் ஃபிஸ்ட் பஞ்ச் செய்து கொண்டாடினார். ரோகித் சர்மாவின் கொண்டாட்டம் தன்னால் இன்னும் வேகமாக ஓட முடியும் என்று சொல்வதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே பயிற்சியாளர் கம்பீர் உடன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கூட்டணி பேசுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இங்கிலாந்து ஒருநாள் தொடருடன் ரோகித் சர்மாவை ஓய்வு பெற வைக்கும் திட்டமும் நடந்தன. கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி இதனை செயல்படுத்த விரும்பியதாக கூறப்பட்டது. இருப்பினும் ரோகித் சர்மா லார்ட்ஸில் சதம் அடித்து அசத்தினார்.
தற்போது மீண்டும் சதம் விளாசியதன் மூலமாக ரோகித் சர்மா கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். ரோகித் சர்மாவுக்கு 39 வயதாகிவிட்ட சூழலில், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது 40 வயதாகி இருக்கும். இருப்பினும் ரோகித் சர்மா ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்தி வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.