`என்பெயரில் இருப்பதால் எனக்குத்தான் சொந்தம்' – அமிதாப்பச்சன் இல்லத்துக்கு உரிமைகோரும் தம்பி மனைவி

Spread the love

மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஜல்சா பங்களாவில் வசித்து வருகிறார். அந்த வீடு அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் இந்த வீட்டிற்கு அமிதாப்பச்சனின் சகோதரர் மனைவி ரமோலா பச்சன் இப்போது உரிமை கோரி இருக்கிறார். ஜல்சா இல்லம் ரமோலா பச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் அந்த வீட்டை அமிதாப்பச்சன் தனது மனைவி ஜெயாபச்சனுக்கு 1993ம் ஆண்டு தானமாக எழுதி கொடுத்து இருக்கிறார். இவ்வளவு நாட்களாக அமைதியாக இருந்த ரமோலா பச்சன், கடந்த ஏழு மாதங்களாக பத்திர பதிவுத் துறையினரிடம் இது தொடர்பாக பல புகார்களை அளித்துள்ளார்.

ஜெயாபச்சனுக்கு தானமாக எழுதிக்கொடுக்கப்பட்ட பரிவர்த்தனை குறித்து தனக்குத் தெரியாது என்றும், அதற்குத் தான் சம்மதிக்கவில்லை என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஜல்சா பங்களாவின் சொத்து ஆவணங்களில் ரமோலா பச்சனின் பெயர்தான் இது வரை இருக்கிறது. ஆனால் பங்களா இருக்கும் கபோல் ஹவுசிங் சொசைட்டியில் ஜல்சா பங்களாவின் உரிமையாளர் ஜெயாபச்சன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜல்சா சொத்து பரிவர்த்தனை குறித்து ரமோலா கேள்வி எழுப்பியது மட்டுமின்றி, அந்த தானபத்திரம் (gift deed) எவ்வாறு தயாரிக்கப்பட்டு, பின்னர் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்தும் ரமோலா கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் அளித்துள்ள புகாரில் அந்த ஆவணம் முத்திரை வரி (stamp duty) செலுத்தப்படாமல், சாதாரண காகிதத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், மேலும், அதில் சாட்சிகளின் கையொப்பங்கள் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இப்புகார் அந்தேரியில் உள்ள கூட்டுறவு சொசைட்டி துணை பதிவாளர் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணை நடத்தி வருகிறார். அவர் இதில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இப்பிரச்னை குறித்து அமிதாப்பச்சனோ அல்லது அவரது மகன் அபிஷேக் பச்சனோ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

சொத்து ஆவணங்களில் இருந்து ரமோலா பச்சன் பெயரை நீக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஜல்சா பங்களா பல தசாப்தங்களாக அமிதாப் பச்சனுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த இல்லத்திற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி வரலாறு உள்ளது. ஜல்சா என்று அழைக்கப்படுவதற்கு முன்பு, இந்த பங்களா மன்சா என்று அறியப்பட்டது. இது தயாரிப்பாளர் என். சி. சிப்பிக்கு சொந்தமானது ஆகும். 1982 ஆம் ஆண்டு வெளியான சட்டே பே சத்தா படத்தில் நடித்ததற்காக அமிதாப்பச்சன் இந்த சொத்தை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சொத்து பின்னர் ஜல்சா என மறுபெயரிடப்பட்டது மற்றும் பச்சன் குடும்பத்தின் சின்னமான இல்லமாக மாறியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *