இரண்டாவது படத்தில்…
முற்றிலும் புதுமுகங்கள்.
காதல் கதை…
அருமையான பாடல்கள்.
காதலுக்கு தூதாக ரயிலையும் அறிமுகப்படுத்தினார்.
பரஞ்சோதி, பாஞ்சாலி, பட்டாளத்தான் இந்த
படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள்.
படம் சூப்பர் ஹிட்.
இரண்டாவது படத்தில் மிக மிக உயரத்துக்கு சென்றார்.
கிராமம் தாண்டி நகரம் சென்று திரில்லிங்கான ‘சிகப்பு ரோஜாக்கள்’ தந்தார்.
‘நத்திங்…நத்திங்..’
NOTHING NEW TO ME என்று சொல்லாமல் சொன்னார்.
இயக்குநர் இமயம்என்று அழைக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
காதலுக்கு என்றும் முதல் மரியாதை தந்தவர் இவர்தான்.
‘தம்தன தம்தன தாளம் வரும்..’ பாடல்
‘அண்ணலும் நோக்கினான்…அவளும் நோக்கினாள்…’ என்று இலக்கிய நயமாக சொன்னவர்களும் அந்த பாடலை பாட யோசிக்க வைத்தார்.
இன்றும் காதலின் முன்னுரை அதுவே.
‘பூவை பறித்தால் மட்டும் வாடாது…செடியிலே விட்டு வச்சாலும் வாடிடும்…’ என்ற புதிய சிந்தனையை
புதிய வார்ப்புகளில் சொன்னார்.
கை வீசம்மா கை வீசு தான் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
கிழக்கு சீமையிலே யும் அதற்கு சமமாக ஒரு அண்ணன் தங்கை இருந்ததை பார்த்தோம்.
அழகான நீரோடை.
அதில் மரங்களில் இருந்து விழுந்து மிதக்கும் பூக்கள்.
பயணிக்கும் வாத்துகள்.
மேற்கு தொடர்ச்சி மலை.
அதை தொட்டுச் செல்ல பறந்து செல்லும் பறவைகள்.
வெறும் வசனங்களால் காட்சிகளை நகர்த்தாமல், கண்ணான கண்ணனின் ஒளிப்பதிவு மூலம் கதையை தொடர்ந்து கொண்டு சென்றார்.
முதல் மரியாதை படத்தில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும்
நடிகர் திலகம் அவர்களை ராதா பார்க்க வரும் போது..
அவர் கால் அந்த ஊரில் படும் போது
நடிகர் திலகம் அவர்களுக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்படுமே…
அந்த ஒரு காட்சி…
பக்கம் பக்கமா பேசும் வசனங்களை விட அற்புதமாக இருந்தது.
வேதம் புதிது படத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றில் சரிதா அமலாவிடம் ‘தாயி இங்கிட்டு ஒரு கோலம் போடு…’ என்று சொல்லும் காட்சியில் அமலா கோலம் போடும் போது புல்லாங்குழல் கலந்து ஒரு பின்னணி இசை வரும்.
காதில் ரம்மியமாக அது ஒலிக்கும்.
நாயகனுக்குள் காதல் அரும்பும்.
‘கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா’ என்று பாடச் சொல்லும்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட அந்த படத்தில் இப்படி ஒரு காதல் காட்சி இருக்கும்.
காதல் ஓவியம் படம் தோல்வி அடைந்திருக்கலாம்.
ஆனால் அந்த படத்தின் பாடல்கள் சாகா வரம் பெற்றவை.
‘நதியில் ஆடும் பூவனம், வெள்ளிச்சலைங்கைகள் கொண்ட கலைமகள், என் நாதமே வா..’
இந்த பாடல்கள் மீண்டும் எதாவது ஒரு படத்தில் இடம்பெற வேண்டும் என்பது எனது கனவு.
இந்த உலகம் முழுவதும் தினமும் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்று வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
காதலர்கள் ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்’ என்று பாடி கொண்டே இருப்பார்கள்.
ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கேன் என்று சொல்பவர்கள் ‘பூங்காற்று திரும்புமா’ கேட்டு ஆறுதல் அடைவார்கள்.
இவர்கள் அனைவரின் இதயங்களில் இருந்து ஒலிக்கும் ‘என் இனிய தமிழ் மக்களே’ குரல்.
“இதயம் போகுதே எனையே பிரிந்தே…” என்று
கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் எழுதினார்.
சத்தியமான வார்த்தைகள்.
இறுதி வரிகளில் ‘நிழல் போல உன்னோடு நான் சங்கமம்…தரவேண்டும் வாழ்வில் நீ குங்குமம்’ என்று முடித்திருப்பார்.
அவரின் நிழல் நம் அருகில்தான் உள்ளது.
காதலர்களுக்கு குங்குமமாக அவர் வாழ்வார்.