திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேசியதாகவும், கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல், முதலமைச்சர் விஜய் நடிகை ஒருவருடன் வீட்டில் இருப்பதாக கூறி ஒருமையில் பேசியிருந்தார்.
இதையடுத்து ஆத்தூர் தவெக நகரச் செயலர் செல்வம் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் கடந்த 25 ஆம் தேதி திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் நடந்த பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து ஆத்தூர் போலீஸார் அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அப்போது அங்கு நின்ற திமுகவினர் அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர்.




தொடர்ந்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் தனது வாகனத்தில் வருவதாக தெரிவித்தார். ஆனால் போலீஸார் அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு நின்ற திமுகவினர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவரை அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!