கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி 3.2 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ‘அறப்போர் இயக்கம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.
அதன் பேரில் சமீபத்தில் எ.வ. வேலு மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சேர்ந்த 9 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது குற்றவியல் சதி, மோசடி, அரசுப் பணம் கையாடல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தனர்.
நேற்று (ஜூன்.25) காலை முதல் சென்னை திருவண்ணாமலை, கரூர், திண்டுக்கல், கோவை மற்றும் திருப்பூர் என 20 இடங்களில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்பு உடைய அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் முக்கியமான ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்கிற்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைதுறை ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.