International
-Nantha Kumar R
டெஹ்ரான்: சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே நடந்த போர் முடிவுக்கு வந்தது. இருநாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த போர் முடிவடைந்தது. இதையடுத்து ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது. மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், கேஸ் உள்பட பிற சரக்கு கப்பல்கள் பயணத்தை தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் சிங்கப்பூர் கொடியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை சரக்கு கப்பல் ஒன்று கடந்தது. அப்போது அந்த கப்பல் மீது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கப்பலின் ஸ்டார்போர்ட் பகுதியில் ஏவுகணை போன்ற பொருள் தாக்கியதில் இதில் கட்டுப்பாட்டு அறை (Bridge) சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கப்பல்களையும், மாலுமிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தனது திட்டத்தை ஐநா சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த தாக்குதல் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் மீதான அச்சத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.