மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தபாஹி (Bittu Tabahi), கடந்த ஜனவரி 26 அன்று நதியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தனியாகத் தொடங்கினார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது. முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் உட்படப் பல பிரபலங்கள் இவரது சேவையைப் பாராட்டித் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பிட்டு தபாஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் 8 மாத உழைப்பு வீணாகிவிட்டது” எனப் பதிவிட்ட புதிய வீடியோ ஒன்று பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நதியின் கரைகளை அவர் முழுமையாகச் சுத்தம் செய்து முடித்துச் சில வாரங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் அந்த நதி முழுவதிலும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிகள் மற்றும் பூக்கள் மிதந்து நதி முழுமையாக மூடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், பிட்டு தபாஹி கையில் ஒரு ஆரஞ்சு நிறக் கம்புடன் கலங்கலான ஆற்று நீரில் இறங்கி, நீரில் மிதக்கும் சாமந்திப் பூக்கள், பிளாஸ்டிக் உறைகள் மற்றும் தெர்மோகோல் கழிவுகளை வெளியேற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.