'எப்படியாவது அமைச்சர் ஆகிடணும்…' – போஸ்டர் ஒட்டி தொல்லை செய்யும் தவெக எம்.எல்.ஏ; பின்னணி என்ன?

Spread the love

சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ ஈ.சி.ஆர் சரவணன் தொகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போஸ்டர்களும் பேனரும் வைத்து மக்களுக்கு இடையூறு கொடுப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பலரும் எழுதி வருகின்றனர்.

ஈ.சி.ஆர்.சரவணன்
ஈ.சி.ஆர்.சரவணன்

ஈ.சி.ஆர் சரவணன் ஏன் இத்தனை அலப்பறை கொடுத்து கொண்டிருக்கிறார் என தவெக கட்சி வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘ஈ.சி.ஆர்.சரவணன் ரசிகர் மன்றத்திலிருந்தே தலைவருடன் பயணிப்பவர்தான். ஆனால், அவரின் விளம்பர வெறி கட்சிக்குள்ளேயே சிலருக்குப் பிடிக்காது.

மழை வெள்ளங்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ரூபாய் பால் பாக்கெட் வாங்கி கொடுத்தாலும் அதற்கு 100 ரீல்ஸ் போடுவார். இப்படியெல்லாம் செய்வது வெளியில் கெட்டப் பெயரை உண்டாக்கும் எனச் சொன்னாலும் கேட்கமாட்டார்.

அதையெல்லாம் உடனிருக்கும் நிர்வாகிகளே ரசிக்கவில்லை. ஓராண்டுக்கு முன்பு இவருக்கு மாவட்டச் செயலாளர் போஸ்டிங் வழங்கப்பட்டது. பனையூரில் தலைவரிடம் நியமன ஆணையை வாங்கிவிட்டு 500 ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு ஈஞ்சம்பாக்கம் வரைக்கும் கார் மேல் ஏறி நின்று வந்தார்.

மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட போது பனையூரில்
மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட போது பனையூரில்

இடையில் ஒவ்வொரு பாய்ண்ட்டிலும் புல்டவுசர் மூலம் ரோஜா பூக்களைப் போடவும் ஏற்பாடு செய்திருந்தார். ஈ.சி.ஆரில் அன்றைக்கும் மட்டும் 2 மணி நேரத்துக்கு இவரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தலைமைக்குப் புகார் போய் கண்டித்த பிறகும் திருந்தவில்லை. சோழிங்கநல்லூர் தமிழகத்திலேயே பெரிய தொகுதி. அந்தத் தொகுதியை வென்றால் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நினைத்தார்.

ஆனால், தலைமை இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்ற மே 10 ஆம் தேதியே, ‘எங்களையெல்லாம் அமைச்சர் பட்டியலில் சேர்க்க மாட்டீர்களா….’ எனப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் ஏகத்துக்கும் வருத்தப்பட்டு புலம்பியிருக்கவும் செய்கிறார்.

அவர் ‘தளபதிக்கிட்ட சொல்றேன்ப்பா…’ என்பதோடு கடந்து போய்விட்டார். இன்னும் 2-3 மாதங்களில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம், கில்லி சரத் போன்றோர் அமைச்சரவையிலிருந்து தூக்கியடிக்கப்படலாம் எனும் தகவல் கோட்டை வட்டாரத்தில் உலவி வருகிறது. இதை அறிந்து கொண்ட சரவணன் தன்னிடம் இருக்கும் ஒரே வழியான படோபடமாக விளம்பரம் செய்யும் வழியைக் கையில் எடுத்திருக்கிறார்.

பனையூர் மற்றும் நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் வரைக்கும் முதல்வரின் கண்ணில் படும்படியாக அவரை வாழ்த்தி போஸ்டர்களையும் பேனர்களையும் அடித்து வைத்திருக்கிறார். ‘மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் போஸ்டர் பேனர் அடிக்கக்கூடாது’ எனத் தலைமை உத்தரவிட்ட பிறகும் இப்படிச் செயல்பட்டு வருகிறார்.

ஈ.சி.ஆர்.சரவணன்
ஈ.சி.ஆர்.சரவணன்

போஸ்டர் ஒட்டுவது, பேனர் அடிப்பது, விதவிதமாக ரீல்ஸ் போடுவது இவை மூன்றும்தான் அவருக்குத் தெரிந்த விஷயங்கள். இதைச் செய்தே அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என நினைக்கிறார். ஆனால், இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் முதல்வர் வசிக்கும் தொகுதிக்குள்ளாகவே கட்சிக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடுவார் எனத் தலைமை உஷாராகவே இருக்கிறது” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *