கடந்த மூன்று நாட்களாகத் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, புதிய படங்களின் அறிவிப்பு எனப் பல அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. அந்த அப்டேட்களையெல்லாம் இங்கு பார்ப்போமா…
கார்த்தி – மோகன் ராஜா படம்:
இயக்குநர் மோகன் ராஜாவுக்குச் சினிமாவில் இது 25-வது ஆண்டு. இந்த ஸ்பெஷல் தருணத்தில் நடிகர் கார்த்தியுடன் ஒரு புதிய படத்திற்குச் கை கோத்திருக்கிறார் மோகன் ராஜா. கார்த்தியின் 31-வது படத்தை இவர் இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தின் மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் கூறியிருக்கிறார்கள்.
அஜித் அப்டேட்கள்:
இந்த வாரம் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஆம், அஜித் நடிக்கும் இரண்டு படங்களின் அப்டேட்கள் இந்த வாரம் வெளிவந்திருக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அனிருத் இசையில் அஜித்குமார் நடிக்கவிருக்கும் “டார்டெவில்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டிலோடு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
பிறகு, இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும், அஜித்தின் ரேஸிங் பற்றிய ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்திற்கு ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்ஷூட் ஆஃப் சேலஞ்சஸ்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களுக்காக இதனைத் தியேட்டர் ரிலீஸாகக் கொண்டு வருகிறார்கள்.