எம்.ஜி.ஆர். பாணியில் விஜய்… கர்நாடக அரசியலில் என்ட்ரியா? – Kumudam

Spread the love

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த தவெக அரசின் முகமாக விளங்கும் முதலமைச்சர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே திமுகவை நேரடியாக விமர்சித்தும், அதிமுக குறித்து மௌனம் காத்தும் வந்தார். இதன் காரணமாக அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பாரா, அல்லது பாஜகவுடன் கைகோர்ப்பாரா என்ற அரசியல் யூகங்கள் நீண்ட நாட்களாக வலம் வந்தன.

அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது தேர்தல் பிரசார மேடைகளில் “கொள்கை ரீதியான எதிரி பாஜக” என்று விஜய் அறிவித்தார். இருப்பினும், அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து எந்தவித எதிர்மறை கருத்தையும் அவர் பொதுவெளியில் பதிவு செய்யவில்லை. தேர்தல் பிரசார பாடல்கள் முதல் ஆட்சி நடத்தும் விதம் வரை, எம்.ஜி.ஆரின் அரசியல் பாணியை விஜய் பின்பற்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சிலர், எம்.ஜி.ஆரின் அரசியல் சாதனையையே விஜய் முறியடித்துவிட்டதாகவும் மதிப்பிடுகின்றனர்.

இதற்கிடையில், விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி, அதில் அவர் சாட்டையை சுழற்றும் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. “விஜய் தன்னை எம்.ஜி.ஆராக அடையாளப்படுத்த முயல்கிறாரா? அல்லது அவரது அரசியல் பாணியை விரும்பி ஏற்றுக்கொண்டாரா?” என்ற விவாதங்கள் எழுந்தன.

இந்தச் சூழலில், நீண்டகாலமாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் மேகதாது அணை விவகாரத்தில் விஜய் தனது மௌனத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது.

1980-களின் தொடக்கத்திலிருந்தே மேகதாது அணை தொடர்பான பிரச்சினை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நீடித்து வருகிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில், அந்த அணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடிதங்கள் எழுதியதோடு, நேரடியாக பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.

கர்நாடகாவின் நிலைப்பாட்டின்படி, மேகதாது அணை பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய திட்டமாகும். ஆனால் தமிழ்நாட்டின் பார்வையில், அந்த அணை கட்டப்பட்டால் காவிரி நீரின் ஓட்டத்தை கர்நாடகா கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும். இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும், நேரமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. கீழ்ப்பாயும் மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த புதிய அணையும் கட்டக்கூடாது என்பதே அதன் நிலைப்பாடாக உள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக அமைச்சரை விஜய் சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தவெக செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கத்திலும் இந்தப் பயணம் அமையக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு விஜய் சென்றபோது பெரும் கூட்டம் கூடியது அல்லவா. இப்போது தமிழர்கள் நிறைந்துள்ள பெங்களூருவில் அதைவிட அதிகம் கூட்டம் திரளும் அதன்மூலம் கர்நாடகாவிலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தங்களது செல்வாக்கை காட்டி, அடுத்து கர்நாடகா அரசியலிலும் என்ட்ரி கொடுப்பதுதான் விஜய்யின் பிளான் என்கிறார்கள்.

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு மேகதாது அணை விவகாரத்தில் சுமுகமான தீர்வை எட்டுவதற்கான முயற்சியா? அல்லது கர்நாடக அரசியலிலும் புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கும் நகர்வா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *