அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் என்றாலே மின்னும் ஹாலிவுட் கனவுகளும் வண்ணமயமான விளக்குகளும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதே நகரின் இன்னொரு பக்கத்தில், கான்கிரீட் கட்டடங்களுக்கு நடுவே உறைந்திருக்கிறது ஒரு பயங்கரமான மர்மம். நாவலாசிரியர்கள் கற்பனையில் கூட எழுத அஞ்சும் திகில் அத்தியாயங்களை நிஜ வாழ்க்கையில் சுமந்து நிற்கும் ஒரு கட்டடம் செசில் ஹோட்டல் (Cecil Hotel).
2013-ம் ஆண்டு இந்த ஹோட்டலின் மொட்டை மாடி குடிநீர்த் தொட்டிக்குள் இருந்து மீட்கப்பட்ட 21 வயது மாணவி எலிசா லாமின் (Elisa Lam) சடலமும், அதற்கு முன் லிஃப்ட்டில் பதிவான அவரது விசித்திரமான சிசிடிவி காட்சிகளும் உலகையே அதிர வைத்தன.

சாபத்தின் தொடக்கம்
1924-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸின் முக்கியப் பகுதியில் வர்த்தகர்களுக்காக மிக ஆடம்பரமாகக் கட்டப்பட்டது செசில் ஹோட்டல். ஆனால், 1930-களில் அமெரிக்காவைத் தாக்கிய மாபெரும் பொருளாதார மந்தநிலை, அந்தப் பகுதியை வீடற்றவர்களும் ஏழைகளும் தஞ்சம் புகும் “ஸ்கிட் ரோ’ பகுதியாக மாற்றியது. ஆடம்பர ஹோட்டல் மிகக் குறைந்த வாடகைக்கு அறைகள் வழங்கும் இடமாக மாறியது.
அங்கிருந்து தொடங்கியது அதன் இருண்ட வரலாறு. விஷம் அருந்துதல், துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளுதல், ஜன்னல் வழியே குதிப்பது என பல தற்கொலைகள் அங்கு அரங்கேறின. 1962-ல் பாலின் ஓட்டன் என்ற பெண் 9-வது மாடியிலிருந்து குதித்தபோது, நடைபாதையில் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மீது விழுந்து இருவரும் உயிரிழந்த கொடூரமும் இங்கு நடந்தது.
குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் நிறைந்த ஒரு பகுதியாக மாறிய செசில் ஹோட்டல், உலகின் மிகக் கொடூரமான மனித வேட்டைக்காரர்களுக்குப் புகலிடமானது.