அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தொடர்ந்து வரும் மோதல்போக்கு காரணமாக, வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலையில் சராசரியாக ரூ. 993 உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மே 1, 2026, வெள்ளிக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவதற்கு முன்புவரை “எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தப்போவதில்லை’ என மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து கூறிவந்த நிலையில், ஏப்ரல் 29-ம் தேதி, தேர்தல்கள் நிறைவடைந்த பிறகு, இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வின் அடிப்படையில் டெல்லியில் ஒரு வணிக எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை தற்போது ரூ. 3,071.50 ஆக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. டெல்லியில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ. 913 ஆகத் தொடர்கிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.