எல்லாம் பொய்யா கோபால்… சென்னைக்கு ரெட் அலர்ட்… மழையே இல்லை! கோவையில் வெளுத்த மழை..! – Kumudam

Spread the love

சென்னையில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்பான வானிலை முன்னறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, ஒரு நாளில் கனமழை பதிவான நிலையில், அதற்கு அடுத்த நாளுக்குச் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நாளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாதது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை(அக்.,17) சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக பாரிமுனை பகுதியில் சுமார் 30 செ.மீ அளவுக்கு மழை பதிவானதாகக் கூறப்படுகிறது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது.

இந்த நிலையில், அடுத்த நாளான அக்டோபர் 18-ம் தேதி சென்னையில் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. பொதுவாக 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யக்கூடிய சூழல் இருந்தால், அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்படும்.

ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த நாளில் சென்னையில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகவில்லை. இதுதான் தற்போது வானிலை முன்னறிவிப்பு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழையை 100 சதவிகிதம் துல்லியமாகக் கணிக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். குறிப்பாக, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் காற்றின் திசை, மேகங்களின் நகர்வு, கடல் வெப்பநிலை உள்ளிட்ட பல காரணிகளால் மழையின் தீவிரத்திலும், பெய்யும் இடத்திலும் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில், மிதமான மழை முதல் அதி கனமழை வரையிலான எச்சரிக்கைகளை வழங்குவதில் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவையில் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, நஞ்சுண்டாபுரம் சாலை, லங்கா கார்னர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில ரயில்வே சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை புறநகர் பகுதிகளான பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், வெள்ளானைப்பட்டி, போத்தனூர், மதுக்கரை, ஈச்சனாரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு நேற்று(அக்.,18) இரவு கோவையின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இதனால், மழை பெய்யக்கூடிய பகுதிகளைத் துல்லியமாகக் கண்டறிந்து எச்சரிக்கை வழங்குவதில் இன்னும் கூடுதல் கவனம் தேவை என்ற கருத்துகள் எழுந்துள்ளன.

ஒருபுறம் எச்சரிக்கை விடுத்தும் மழை பெய்யாத நிலையும், மறுபுறம் கனமழை கொட்டிய பகுதிகளில் முன்கூட்டிய எச்சரிக்கை போதிய அளவில் இல்லாத நிலையும் ஒரே நேரத்தில் உருவாகியிருப்பது, வானிலை முன்னறிவிப்பு முறையின் செயல்பாடு குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *